போலி அப்பாவை உட்கார வைத்து ரேஸ் பைக்கை திருடிய இளைஞர்.. உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

 

உத்தரபிரதேசத்தில் டெஸ்ட் ட்ரைவ் செய்ய வேண்டும் என்று கூறி ஷோருமில் இருந்து பைக்கை இளைஞர் ஒருவர் திருடி சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஒரு பைக் ஷோரூமில் இருந்து டெஸ்ட் டிரைவ் செய்வதாக கூறி பைக்கை திருடி சென்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சாஹல் என்ற இளைஞர் கடந்த  3-ம் தேதி ரூ.1 லட்சம் விலையுள்ள செகண்ட் ஹேண்ட் ரேஸிங் பைக்கை வாங்குவதற்காக பைக்  ஷோரூமிற்கு வந்துள்ளார். அப்போது தனது அப்பா என்றுகூறி ஒரு முதியவரை அவர் கூட்டி வந்துள்ளார். 

பைக்கை வாங்குவதற்கு முன்பு டெஸ்ட் ட்ரைவ் செய்ய வேண்டும் என்று கூறி தனது அப்பாவை ஷோரூம் ஊழியர்களிடம் விட்டுவிட்டு பைக்கை எடுத்து சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் சாஹல் வராததால் சந்தேகமடைந்த ஊழியர்கள் முதியவரிடம் விசாரித்துள்ளனர். அப்போது அந்த முதியவர் நான் சாஹலின் தந்தை இல்லை என்றும் டீ விற்பவர் என்று கூறியுள்ளார்.

சாஹல் அடிக்கடி தனது கடைக்கு டீ குடிக்க வருவார், ஒரு முக்கிய வேலையாக தன்னுடன் வரும்படி அவர் கூறியதாக ஊழியர்களிடம் அந்த முதியவர் தெரிவித்தார். பின்னர் பைக் திருடுபோனதை அடுத்து ஷோரூம் உரிமையாளர் போலீசில் புகார் அளித்தார். 

இதனையடுத்து சாஹலை தீவிரமாக தேடிவந்த போலீசார் நேற்று அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து திருடு போன பைக்கையும் போலீசார் கைப்பற்றினர். சாஹலிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், “தனக்கு மோட்டார் சைக்கிள்கள் மீது மிகுந்த ஆர்வம் உள்ளது. தனது குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலைமைகளால் பைக் வாங்க முடியவில்லை. ஆதலால் அதிவேக மோட்டார் சைக்கிளை திருடினேன்” என்று அவர் தெரிவித்தார்.