அடுத்தடுத்து 4 பேரை திருமணம் செய்து மோசடி செய்த இளம்பெண்... மூன்றாவது கணவர் பரபரப்பு புகார்!
கர்நாடகாவில் ஏற்கனவே 2 திருமணம் நடந்ததை மறைத்து தன்னை 3வதாக திருமணம் செய்து ஏமாற்றிய இளம்பெண், தற்போது 4வது திருமணம் செய்துள்ளதாக இளைஞர் ஒருவர் போலீசில் பரபரப்பு புகார் கூறியுள்ளார்.
கர்நாடகா மாநிலம் தாவணகெரே பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவர் கடந்த 2022-ம் ஆண்டு மண்டியா மாவட்டத்தில் உள்ள நரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த நிர்மலா என்ற சினேகா என்பவரை திருமணம் செய்துள்ளார். நன்றாக இருந்த அவரது குடும்பத்தில், மூன்று மாதங்களுக்குத் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி தனது பெற்றோர் வீட்டிற்கு சினேகா சென்றுள்ளார். இதன் பின் அவர் காணாமல் போனார்.
இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ரகு என்பவரை தனது மனைவி சினேகா திருமணம் செய்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தாவணகெரேவில் உள்ள கேடிஜே நகர் காவல் நிலையத்தில் கடந்த 21-ம் தேதி தனது மனைவி காணாமல் போனதாக பிரசாந்த் புகார் செய்தார்.
இதுகுறித்து பிரசாந்த் கூறுகையில். “எனது மனைவி சினேகா கர்ப்பமாக இருப்பதாகக் கூறி அவரது பெற்றோர் வீட்டிற்குச் சென்றார். கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்டு குழந்தையை கலைத்துவிட்டு, எனக்கு தெரிவிக்காமல் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். எங்களுக்கு திருமணமாகி ஒன்றரை வருடங்களாவதால் நான் மிகவும் பாதிக்கப்பட்டேன். அவரது திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பார்த்த பிறகு தான் அவரது புதிய திருமணம் பற்றி அறிந்தேன். சமூக வலைதளங்களில் அவரைச் சந்தித்த பிறகு அவர் மீது காதல் கொண்டு திருமணம் செய்தேன்.
எனக்கு முன் இரண்டு ஆண்களை மணந்ததால் என் மனைவிக்கு நான் மூன்றாவது கணவன். தற்போது வேறு ஒருவரை திருமணம் செய்துள்ளார். நான் அவளை திருமணம் செய்யும் போது அவள் குடும்பத்தில் இருந்து யாரும் என்னிடம் அவள் முந்தைய திருமணங்களைப் பற்றி கூறவில்லை. எதிர்காலத்தில் மற்ற ஆண்களை ஏமாற்றாமல் இருக்க சினேகா மீது மோசடி புகார் கூறியுள்ளேன்” என்றார்.
தற்போது பெங்களூரில் வசிக்கும் ரகு என்பவரை சினேகா நான்காவது திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில், அவரது மூன்றாவது கணவர் பிரசாந்த் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக உள்ள சினேகா, வீடியோக்களில் அதில் பதிவேற்றம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.