ரீல்ஸ்காக தெருநாயை கொடுமைப்படுத்திய இளைஞர்.. கடும் எதிர்ப்புகளையடுத்து கைது!
உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் உள்ள ஷகுர்பூர் பகுதியில் ஜாபர் என்ற இளைஞர் செய்த செயல் இன்று பல இணையவாசிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் ரீல்ஸ்க்காக தெருநாய் ஒன்றை கொடுமைப்படுத்தும் இளைஞர் ஒருவரின் செயல் சமூக வலைதளத்தில் பலரின் கண்டனத்தை பெற்றுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஷகுர்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜாபர். இந்த இளைஞர், இன்ஸ்டாவில் ரீல்ஸ் போட வேண்டும் என்பதற்காக தெருநாய் ஒன்றின் ஒரு காலை மட்டும் பிடித்து கொண்டு, அதனை தலைகீழாக சுற்றியுள்ளார். வேகமாக நெருப்பு உள்ள பகுதிக்கு அருகேவைத்து நாயை சுழற்றுகிறார் அந்நபர். இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. வீடியோவில் நாய் அலறும் சத்தம் நம் காதுகளையும் துளைக்கிறது.
“ரீல்ஸ் பதிவு செய்வதற்காக விலங்குகள் மீது நிகழ்த்தப்படும் இப்படியான கொடுமையை பொறுத்துக்கொள்ள முடியாது. நாயும் ஒரு உயிருள்ள ஜீவன்தானே.. இதனை செய்பவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இதுதொடர்பான தன்னுடைய பதிவில் உத்தரபிரதேச போலீசாரையும் இணைத்து நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தியுள்ளார் பத்திரிகையாளர் லோகேஷ். அவரின் பதிவிற்கு கீழ் பதிலளித்துள்ள காவல்துறை, “இந்த விவகாரம் தொடர்பாக, போஜ்பூர் காவல் நிலையத்தில் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளது.