சனி, ஞாயிறுகளில் மட்டும் பாம்பு கடி வாங்கும் இளைஞர்.. உத்தர பிரதேசத்தில் வினோத சம்பவம்!

 

உத்தர பிரதேசத்தில் இளைஞரை சனி அல்லது ஞாயிறுகளில் மட்டும் பாம்பு கடிக்கும் வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பாம்பு என்றாலே படையே நடுங்கும் என்பார்கள். பாம்பு கடித்து விஷம் ஏறினால் கொஞ்ச நேரத்தில் உயிரிழப்பு ஏற்பட்டுவிடும். இதுபோல ஒவ்வொரு ஆண்டும் பல உயிரிழக்கிறார்கள். ஆனால் கதைகளையே மிஞ்சும் வகையில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு நடந்து வரும் சம்பவம் அனைவரையும் அச்சத்தில் உறைய வைத்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் உள்ள சவுரா கிராமத்தைச் சேர்ந்தவர் விகாஸ் தூபே (24). கடந்த 35 நாட்களில் மட்டுமே இவர் 6 முறை விஷப் பாம்புகளிடம் இருந்து கடி வாங்கியுள்ளார்.

ஒவ்வொரு முறையும் பாம்புகள் அவரை கடிப்பதும், அதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுகிறார். அதன் பிறகு குணமடைந்து வீடு திரும்புவது தொடர்கதையாகவே இருக்கிறதாம். இதில் முதல் சம்பவம் கடந்த ஜூன் 2-ம் தேதி நடந்துள்ளது. அன்றைய தினம் அவரது வீட்டில் பாம்பு புகுந்துள்ளது. தூங்கிக் கொண்டிருந்த அவர் அப்போது தான் எழுந்த நிலையில், பாம்பு அவரை கடித்துள்ளது. 

இதையடுத்து உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுள்ளார். அதன் பிறகு கடந்த ஜூலை 6-ம் தேதி வரை மட்டும் துபேவை ஆறு முறை பாம்பு கடித்துள்ளதாம். முதல் நான்கு முறையும் அவர் வீட்டில் இருந்த போது தான் பாம்பு கடித்துள்ளது. இதனால் அவரது வீட்டில் இருந்தவர்கள் துபேவை பார்த்தே அஞ்சியுள்ளனர். வீட்டை விட்டு வேறு இடத்திற்குச் செல்லும்படி துபேவை அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 

இதையடுத்து அவர் அங்கு ராதாநகரில் உள்ள தனது அத்தை வீட்டிற்குச் சென்றுள்ளார். ஆனால் அங்கும் அவரை பாம்புக் கடிக்கும் சம்பவம் தொடர்ந்துள்ளது. இதனால் எங்கு துபேவுக்கு எதாவது ஆகிவிடுமோ என அஞ்சிய அவரது பெற்றோர் மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். இருப்பினும், கடந்த ஜூலை 6-ம் தேதி, மீண்டும் அவரை பாம்பு கடித்துள்ளது. அப்போது தான் அவரது உடல்நிலை மிக மோசமான நிலைக்குச் சென்றுள்ளது.

இதில் மற்றொரு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் விகாஸ் துபேவை 6 முறை பாம்புகள் கடித்துள்ள நிலையில், அவை அனைத்தும் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் தான் நடந்துள்ளன. மேலும், ஒவ்வொரு முறையும் பாம்பு தன்னை கடிப்பதற்கு முன்பும் ஏதோ நடக்கப் போகிறது என தோன்றியதாகவும் அவர் கூறுகிறார்.