விஷப் பாம்புக் கடியால் உயிரிழந்த இளைஞன்.. சடலத்துடன் கடித்த பாம்பை உயிரோடு எரித்த கிராம மக்கள்!

 

சத்தீஸ்கரில் பாம்பு கடியால் உயிரிழந்த இளைஞரின் உடலை எரித்த சிதையில் கடித்த பாம்பையும் கிராம மக்கள்  உயிருடன் உள்ளே வீசிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.  

சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தில் உள்ள பைகாமர் கிராமத்தில் கடந்த சனிக்கிழமை இரவு திகேஸ்வர் ரதியா (22) என்ற இளைஞனை அவர் வீட்டில் படுக்கையில் நுழைந்த விஷப் பாம்பு கடித்துள்ளது.

உடனே மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரதியா நேற்று (செப் 23) காலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து கிராம மக்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி ரதியாவை கொன்ற விஷப்பாம்பை  கூடையில் போட்டு பாதுகாத்து வைத்துள்ளனர். 

ரதியாவின் உடல் கிராமத்திற்கு  கொண்டுவரப்பட்டு இறுதிச் சடங்கு நடந்துள்ளது. அவரின் உடல் சிதையூட்டப்பட்ட போது கூடையில் பிடித்துவைத்திருந்த பாம்பை எடுத்து வந்து உயிருடன் எரியும் சிதையில் வீசியுள்ளனர். தகவலறிந்து போலீஸ் வந்து கேட்டதுக்கு அந்த பாம்பு மற்றவர்களையும் கடித்து விடுமோ என்று பாய்ந்து அப்படி செய்ததாக கிராமத்தினர் கூறியுள்ளனர்.