மாரடைப்பால் இளம் மருத்துவர் மரணம்.. பழைய நண்பர்களை சந்திக்க சென்ற போது சோகம்!

 

உத்தரபிரதேசத்தில் பழைய நண்பர்களை சந்திக்க சென்ற இளம் மருத்துவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் திவோரியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பலிராம் குமார். இவர் மாவட்ட பஞ்சாயத்தின் கூடுதல் தலைமை அதிகாரியாக உள்ளார். இவரது மனைவி மால்தி தேவி. இந்த தம்பதிக்கு அசுதோஷ் குமார், அபிஷேக் குமார் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் அபிஷேக் குமார் கடந்த 2016-ம் ஆண்டு பிஆர்டி மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் தேர்ச்சி பெற்றார். தற்போது இவர், தியோரியா ரயில்வே மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், நேற்று தனது காரை சர்வீஸ் செய்வதற்காக கோரக்பூரில் உள்ள தனது மைத்துனர் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர், மருத்துவக் கல்லூரியின் பழைய நண்பர்கள் சிலரின் அழைப்பின் பேரில் விடுதிக்கு சென்றார். அங்கே உணவு அருந்திய சிறிது நேரத்தில் அபிஷேக் குமாருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு அசிடிட்டி மருந்தை உட்கொண்டார்.

தொடர்ந்து, வலி இருந்ததால் அவரது நண்பர் அபிஷேக் குமாரை மருத்துவமனைக்கு மோட்டர் பைக்கில் அழைத்து சென்று கொண்டிருந்த நிலையில், மயங்கி விழுந்து சுயநினைவை இழந்தார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மாலையில் அவரது உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

டாக்டர் அபிஷேக் குமார் மரணம் குறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் கணேஷ் குமார் கூறுகையில், இது மிகவும் வருத்தமான சம்பவம். டாக்டர் அபிஷேக் இந்தக் கல்லூரியின் மாணவர். இறைவன் அவரது ஆன்மா சாந்தியடையட்டும், குடும்பத்தாருக்கு இழப்பைத் தாங்கும் ஆற்றலை வழங்கட்டும். பிரேத பரிசோதனைக்கு பின் உள்ளுறுப்பு பாதுகாக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு பிறகே இறப்புக்கான சரியான காரணம் தெரியவரும் என்று கூறினார்.