டெய்ரி மில்க் சாக்லேட்டில் நெளிந்த புழு.. வாடிக்கையாளர் அதிர்ச்சி!
தெலுங்கானாவில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் நபர் ஒருவர் வாங்கிய டெய்ரி மில்க் சாக்லேட்டில் புழு இருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் பகுதியைச் சேர்ந்த ஒருவர், நகரின் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து வாங்கிய கேட்டபரி டெய்ரி மில்க் சாக்லேட்டின் பாரில் உயிருள்ள புழு ஊர்ந்து செல்வதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ராபின் சாக்கியஸ் என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்து உள்ளார். மேலும் அமீர்பேட் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள ரத்னதீப் ரீடெய்ல் ஸ்டோரில் இருந்து ரூ. 45 செலுத்திய சாக்லேட்டின் பில்லையும் இணைத்தார்.
அந்த பதிவில், “இன்று (பிப். 9) ரத்னதீப் மெட்ரோ அமீர்பேட்டையில் வாங்கிய காட்பரி சாக்லேட்டில் ஒரு புழு ஊர்ந்து கொண்டிருந்தது. காலாவதியாகும் பொருட்களுக்கான தர சோதனை உள்ளதா? பொது சுகாதாரக் கேடுகளுக்கு யார் பொறுப்பு?” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு வைரலான நிலையில் நெட்டிசன்கள் அந்த நபரை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர். ஒரு பயனர், “கேட்பரி குழுவிடம் ஒரு குறையை தெரிவிக்கவும். மாதிரியை சேகரித்து விசாரிக்க வருவேன்.” என்று கூறியுள்ளார். மற்றொரு பயனர், “அவர்கள் மீது வழக்கு தொடுத்து இழப்பீடு கோருங்கள்” என்று கருத்து தெரிவித்தார்.
“ஒரு நல்ல வழக்கறிஞரைக் கலந்தாலோசித்து, முறையான நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யுங்கள், நீங்கள் அதிக இழப்பீடு பெறலாம். உள்நாட்டிலும் பிற நாடுகளிலும் இதே போன்ற வழக்கு இழப்பீடுகளை ஒப்பிடுங்கள்” என்று மூன்றாவது பயனர் எழுதினார்.
கிரேட்டர் ஐதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் இந்த இடுகைக்கு பதிலளித்தது. “உணவுப் பாதுகாப்புக் குழு இந்த பிரச்சினையில் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது, மேலும் இது விரைவில் தீர்க்கப்படும்” என்று பதிவில் கூறப்பட்டுள்ளது. கேட்பரி டெய்ரி மில்க் இந்த இடுகைக்கு பதிலளித்து, திரு. சாக்கியஸ் அவர்களின் கொள்முதல் பற்றிய கூடுதல் விவரங்களை வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.