6 வயது சிறுமியை மூச்சு முட்ட சாப்பிட வைத்தே கொன்ற பெண்.. கடனை திருப்பி கேட்டதால் ஆத்திரம்!
ஆந்திராவில் கடனை திருப்பிக் கேட்டதால், 6 வயது சிறுமியை மூச்சுத்திணறல் ஏற்படும் வகையில் உணவு கொடுத்து நூதன முறையில் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் புங்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் அசன்துல்லா. இவரது மனைவி சானியா. இந்த தம்பதிக்கு வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 6 வயதில் அஸ்வியா என்ற மகள் இருந்தார். அசன்துல்லா அதே பகுதியில் வசிக்கும் ரேஷ்மா என்பவருக்கு 3 லட்சம் ரூபாய் கடன் கொடுத்ததாக தெரிகிறது. ஆனால், வாங்கிய கடனுக்கு வட்டியை கட்டாமல் ரேஷ்மா இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 1-ம் தேதி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த அசன்துல்லாவின் மகள் அஸ்வியா காணாமல் போனார். பல இடங்களில் தேடிப் பார்த்தும் சிறுமி கிடைக்காத நிலையில், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில், புர்கா அணிந்த பெண் ஒருவர் சிறுமியை தூக்கிச் சென்ற காட்சியை கைப்பற்றி விசாரித்தனர்.
இதனிடையே 2 நாட்களுக்கு முன்பு, காணாமல் போன சிறுமியின் உடல் ஏரியில் கண்டெடுக்கப்பட்டது.சந்தேகத்தின் பேரில் ரேஷ்மாவை பிடித்து விசாரித்ததில், கொடுத்த கடனை திருப்பிக் கேட்டதால், தனது தாய் ஹசீனா மற்றும் சிறுவனுடன் இணைந்து அஸ்வியாவை கொலை செய்து ஏரியில் வீசியதை காவல்துறையினர் கண்டறிந்தனர்.
மேலும், வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட சிறுமிக்கு, மூச்சுத்திணறல் ஏற்படும் அளவுக்கு சாப்பாடு போட்டு கொலை செய்ததும் அம்பலமாகியுள்ளது. இதனையடுத்து, ரேஷ்மா, அவரது தாய் மற்றும் சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.