ரக்‌ஷா பந்தனுக்கு சிறுநீரக தானம் வழங்கிய பெண்.. தம்பியின் உயிரைக் காப்பாற்றிய பாசக்கார அக்கா!

 

சத்தீஸ்கரில் பெண் ஒருவர் தனது சகோதரரின் உயிரைக் காப்பாற்ற தனது சிறுநீரகத்தை தானம் செய்ய முடிவு செய்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஷீலாபாய் பால். இவரது தம்பி ஓம்பிரகாஷ் தங்கர் (48). இவர், கடந்த ஆண்டு மே மாதம் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டார். டயாலிசிஸ் செய்ய வேண்டிய அளவுக்கு அவரது சிறுநீரகங்கள் மோசமாகிவிட்டன. ஒரு சிறுநீரகம் 80 சதவீதமும் மற்றொறு சிறுநீரகம் 90 சதவீதமும் சேதம் அடைந்துள்ளன.

இதையடுத்து, குஜராத் மாநிலம் நாடியாட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில், ஓம்பிரகாஷ் தங்கருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். சிறுநீரக தானம் செய்பவர் தேவை என்று மருத்துவர்கள் குடும்பத்தினரிடம் கூறியபோது, ஓம்பிரகாஷின் மூத்த சகோதாரியே உடனடியாக முன்வந்தார்.

இந்தத் தகவலை கேட்ட ஓம்பிரகாஷ் தங்கரின் அக்கா ஷீலாபாய் பால், உடனடியாக தன் சிறுநீரகத்தை தானமாக வழங்க முன்வந்தார். இதையடுத்து தம்பியின் அறுவை சிகிச்சைக்கு சிறுநீரக தானம் செய்வதற்காக தேவையான அனைத்து சோதனைகளையும் மேற்கொண்டார். சோதனை முடிவுகளில் அவரது சிறுநீரகத்தை ஓம்பிரகாஷுக்குப் பொருத்தலாம் என்று மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செப்டம்பர் 3-ம் தேதி நடைபெற உள்ளது. ஓம்பிரகாஷ் மற்றும் ஷீலாபாய் இருவரும் தற்போது குஜராத்தில் அறுவை சிகிச்சைக்கு தயாராகி வருகின்றனர்.

தன் சகோதரனை நேசிப்பதாலும், அவன் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ வேண்டும் என்பதாலும் தான் இதைச் செய்கிறேன் என்று சகோதரி ஷீலாபாய் கூறுகிறார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு சில நாட்களுக்கு முன்பு, ஷீலாபாய் ஓம் பிரகாஷுக்கு ராக்கி கட்டி தன் அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.