ஏன் சத்தமாக இசையை ஒலிக்கவிடுகிறீர்கள்? கேள்வி கேட்ட கர்ப்பிணி மீது துப்பாக்கிச்சூடு!!

 

டெல்லியில்  ஏன் இவ்வளவு சத்தமாக டிஜே இசைக்கிறீர்கள் என கேள்வி கேட்ட கர்ப்பிணிப் பெண்ணை, இரு இளைஞர்கள் கழுத்திலேயே சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் டெல்லியின் சிரஸ்பூர் பகுதியில் வசித்து வருபவர் ஹரிஸ். இவரது வீட்டில் நேற்று முன்தினம் இரவு ‘குவான் புஜன்’ என்ற நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக வீட்டில் அதிக சத்தத்துடன் பாடல் ஒலிபரப்பப்பட்டது.

இரவில் அதிக சத்தத்துடன் பாடல் ஒலிபரப்பட்டதற்கு ஹரிசின் அண்டை வீட்டை சேர்ந்த ரஞ்ஜூ என்ற பெண் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தனது வீட்டின் மொட்டை மாடியில் நின்றவாறு ஹரிசிடம் பாடல் சத்தத்தை குறைக்கும்படியும், இரவு என்பதால் பாடல் ஒலிபரபப்பை நிறுத்துமடியும் ரஞ்ஜூ கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஹரிஸ் தனது நண்பன் அமித் வைத்திருந்த துப்பாக்கியால் ரஞ்ஜூவை நோக்கி சுட்டுள்ளார். இதில், துப்பாக்கி குண்டு ரஞ்ஜூவின் கழுத்தில் பாய்ந்தது. இதனால், ரத்த வெள்ளத்தில் ரஞ்ஜூ சரிந்து விழுந்தார்.

இதையடுத்து, அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் ரஞ்ஜூவை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த துப்பாக்கிச்சூடு குறித்து தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஹரிஸ், அவரது நண்பர் அமித் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும், துப்பாக்கியையும் பறிமுதல் செய்த போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக துணை போலீஸ் கமிஷனர் ரவிகுமார் சிங் கூறுகையில், “சம்பவ இடத்திற்குச் சென்றபோது, சிராஸ்பூரைச் சேர்ந்த ரஞ்ஜூ என்ற பெண் ஷாலிமார் பாக் நகரில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவரது கழுத்தில் துப்பாக்கிச் சூட்டால் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவரால் வாக்குமூலம் அளிக்க இயலாது என்றும் மருத்துவமனையின் மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர், பாதிக்கப்பட்ட பெண்ணின் மைத்துனியை நேரில் பார்த்த சாட்சியாகக் கொண்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது” என்று தெரிவித்தார்.