நாட்டையே உலுக்கிய வயநாடு நிலச்சரிவு.. அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பரபரப்பு!
கேரளாவில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்ட தருணத்தில் நிகழ்ந்த சம்பவங்களை விவரிக்கும் வகையிலான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட மலைக்கிராமங்களில் கடந்த மாதம் 30-ம் தேதி அதிகாலையில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு பெய்த கனமழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் முண்டக்கை கிராமம் முழுவதுமாக அழிந்த நிலையில் சூரல்மலை கிராமம் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது.
மேலும் நிலச்சரிவு, வெள்ளத்தில் 1,000-க்கும் அதிகமானவர்கள் சிக்கினர். இதில் 400-க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ள நிலையில் 100-க்கும் அதிகமானவர்களின் நிலை என்ன என்று தெரியாத நிலை உள்ளது. மேலும் நிலச்சரிவில் சிக்கிய ஏராளமானவர்கள் மீட்கப்பட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கேரளா அரசின் கணக்கின்படி நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களில் 225 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 119 பேரின் டிஎன்ஏ முடிவுகள் கிடைத்துள்ள நிலையில் அதனை வைத்து அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் 119 பேரின் நிலை என்ன? என்பது தெரியவில்லை. தற்போது முண்டக்கரை, சூரல்மலையில் முதற்கட்ட மீட்பு பணிகள் முடிவடைந்த நிலையில் புனர்வாழ்வு நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன.
இந்நிலையில் தான் முண்டக்கை மற்றும் சூரல்மலை ஆகிய 2 கிராமங்களில் வெள்ளம் தாக்கியது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. வீடு, கடைகளில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் தற்போது வீடியோவாக வெளியாகி உள்ளது. அதாவது அதிகப்படியான மழையால் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. சூரல்மலை மற்றும் முண்டக்கரை கிராமங்களில் இந்த வெள்ளம் நுழைந்தது.