வயநாடு நிலச்சரிவு.. பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 வீடுகள் கட்ட 1000 ஏக்கர் தந்த வள்ளல்!

 

வயநாடு நிலச்சரிவில் வீடுகளை இழந்த 100 பேருக்கு வீடுகட்ட 1000 ஏக்கர் நிலம் இலவசமாக வழங்கப்படும் என பிரபல மலையாள தொழிலதிபர் பாபி செம்மனூர் அறிவித்துள்ளார்.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டகை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகளில் கடந்த 30-ம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த கிராமங்கள் மட்டுமின்றி, அதன் அருகே இருந்த அட்டமலை, புஞ்சிரிமட்டம், வெள்ளிரிமலை கிராமங்களும் நிலச்சரிவால் உருக்குலைந்து போனது. நிலச்சரிவின் கோரதாண்டவத்தால் வீடுகள், சாலைகள், வாகனங்கள், பாலங்கள் அடித்து செல்லப்பட்டன. இதனால் கிராம மக்கள் மண்ணில் புதைந்தும், காட்டாற்று வெள்ளத்தில் அடித்தும் செல்லப்பட்டனர். மேலும் பலர் காணாமல் போனார்கள். 

நிலச்சரிவில் சிக்கி இதுவரை 405 பேர் உயிரிழந்து உள்ளனர். இன்னும் 180 பேரை காணவில்லை. சூரல்மலை கிராமம் மற்றும் முண்டக்கை, அட்டமலை பகுதிகளை சேர்ந்த சுமார் 4,833 பேர் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுதவிர அங்குள்ள நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களை கண்டு ரசிக்க வந்த சுற்றுலா பயணிகள் விடுதிகளில் தங்கி இருந்தனர். அவர்களின் நிலை என்ன ஆனது என்பது தெரியவில்லை. சாலியாற்றில் இருந்து உடல்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருவதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் பாபி செம்மனூர் என்பவர் வயநாடு நிலச்சரிவில் வீடு இழந்த 100 குடும்பங்களுக்கு வீடு கட்டிக் கொள்ள நிலத்தை இலவசமாகத் தர உள்ளதாக அறிவித்துள்ளார். கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் பாபி செம்மனூர். இவர் ஒரு ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் கேரளாவில் உள்ள வயநாட்டில் 1000 ஏக்கர் மலைப்பகுதியில் தேயிலைத் தோட்டம் வைத்துள்ளார். அதில் கூடவே இந்தியாவிலேயே பெரிய ரெஸ்ட்டாரண்ட் நடத்தி வருகிறார். மேலும் அங்கே பொதுப்போக்கு சார்ந்த விளையாட்டு தீம் பார்க் ஒன்றையும் நடத்தி வருகிறார். இவரது குடும்பம் தங்க வியாபாரம் செய்து வருகிறது.

இந்நிலையில், வயநாடு நிலச்சரிவில் சிக்கி வீடு இழந்த 100 பேருக்கு வீடு கட்டிக் கொள்வதற்காக இடத்தை இலவசமாகக் கொடுக்க இருப்பதாக பாபி செம்மனூர் அறிவித்துள்ளார். இது குறித்து பிபிசிக்கு பேட்டி அளித்துள்ள பாபி, “மொத்தம் 100 குடும்பங்களுக்கு வீடு கட்டிக் கொள்வதற்காக நிலங்களைக் கொடுக்க முடிவு செய்துள்ளேன். இங்கே எனக்கு 1000 ஏக்கர் நிலம் உள்ளது. அதை ஒட்டிதான் இந்த நிலங்களைக் கொடுக்க உள்ளேன். அந்த நிலத்தில் ஒரு சிறு பகுதிதான் இது. அதையே கொடுக்க தீர்மானித்திருக்கிறேன்.

எங்குப் பார்த்தாலும் எல்லோரும் அழுது கொண்டுள்ளனர். பலரும் அவர்களுக்கு உணவு, உடை எல்லாம் கொடுத்து உதவி செய்து வருகின்றனர். அவர்கள் யாருக்கும் தங்க வீடு இல்லை. அவர்கள் எங்கே போவார்கள்? எங்கே தங்குவார்கள்? அதுதான் கவலையாக உள்ளது. அவர்கள் சம்பாதித்த பணத்தை வைத்துக் கட்டிய வீடுகள் அழிந்துவிட்டன. ஆகவேதான், போச்சே ஃபேன்ஸ் என்ற எனது அறக்கட்டளை மூலம் அவர்களுக்கு வீடுகள் வழங்க உள்ளோம். அவர்கள் வீடுகளைக் கட்டிக் கொள்ளப் பணம் இல்லை. எனவே கட்டுமான செலவுக்கும் உதவ உள்ளோம்.

இது பற்றி அமைச்சரிடம் நேற்று விவாதித்தேன். அவர்கள் சில யோசனைகளை வழங்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களின் பட்டியலைக் கொடுப்பதாகவும் கூறியுள்ளனர். நாம் உதவி செய்வது முக்கியமல்ல, செய்யும் உதவி சரியான நபருக்குப் போய்ச் சேரவேண்டும். அதுதான் முக்கியம். இந்த 100 வீடுகளைக் கட்ட 10 முதல் 15 ஏக்கர் நிலம் தேவைப்படும் எனக் கணக்கிட்டுள்ளோம். ஒருவேளை அதைத்தாண்டிச் சென்றால் கூடுதல் நிலத்தையும் தர இருக்கிறோம்” என்கிறார்.