வாக்கு எண்ணிக்கை ஓவர்.. பாஜக, காங்கிரஸ் கூட்டணியில் எந்த கட்சி எத்தனை இடங்களை பெற்றுள்ளன

 

7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் இப்போது எந்தக் கட்சி எத்தனை இடங்களைப் பெற்றுள்ளன.

இந்தியாவில் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில், ஆளும் பாஜகவும் பீகார் முதல்வர் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம், முன்னாள் பிரதமர் தேவேகவுடா தலைமையிலான மதசார்பற்ற ஜனதாதளம், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் தலைமையிலான சிவசேனா, அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணியை கட்டமைத்தது.

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக, அமமுக, தமாகா, இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம், புதியநீதிகட்சி, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஆகிய கட்சிகள் இடம் பெற்றன.

அதேபோல், ஆளும் பாஜகவை வீழ்த்துவதற்காக தேசிய அளவில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ். சமாஜ்வாடி, கம்யூனிஸ்டு கட்சிகள், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணி என்று ஓர் அணியை அமைத்தன. தமிழ்நாட்டில் இந்த கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி ஆகியவை இடம் பெற்றன.

இந்த நிலையில், நேற்று காலை 8 மணி முதல் 543 தொகுதிகளுக்கு வாக்கு எண்ணிக்கை நடந்தது. வாக்கு எண்ணிக்கை இப்போது நிறைவடைந்துவிட்ட நிலையில், தற்போது தேர்தல் களம் எப்படி இருக்கிறது என்பது குறித்துப் பார்க்கலாம்.

இந்தி ஹார்ட்லேண்ட் பகுதியில் பாஜகவுக்கு அதிர்ச்சி தரும் முடிவுகள் கிடைத்ததால் பாஜகவால் தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சி அமைக்க முடியவில்லை. இருப்பினும், தற்போதுள்ள என்டிஏ கூட்டணி அப்படியே தொடர்ந்தால் பிரதமர் மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பிரதமர் பதவியை ஏற்பது உறுதியாகும். இந்த லோக்சபா தேர்தலில் பாஜக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இது பெரும்பான்மைக்குத் தேவையான 272 இடங்களை விடக் குறைவு என்பதால் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பாஜக கடந்த முறை 303 இடங்களில் வென்ற நிலையில், இந்த முறை சுமார் 60 இடங்களை இழந்துள்ளது.

பாஜக கூட்டணிக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் பீகாரில் நல்ல செய்தி கிடைத்துள்ளது. ஆந்திராவில் என்டிஏ கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் 16 இடங்களில் வென்றுள்ள நிலையில், பீகாரில் நிதிஷ் குமாரின் ஜேடியு 12 இடங்களில் வென்றது. இந்த இரு கட்சிகளின் ஆதரவு இருந்தால் மட்டுமே பாஜகவால் ஆட்சியை அமைக்க முடியும். மேலும், ஷிண்டே சிவசேனா 7 தொகுதிகளையும், லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 5 சீட்களையும் வென்றுள்ளது. இவை தவிர ஜேடிஎஸ், ராஷ்ட்ரிய லோக் தளம் தலா இரண்டு இடங்களில் வென்றன.

மறுபுறம் காங்கிரஸ் கடந்த 2019-ல் வென்ற 52 இடங்களில் மட்டுமே வென்ற நிலையில், இந்த முறை 99 இடங்களை வென்றது. குறிப்பாக மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் அரியானா காங்கிரஸ் நல்ல வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்தியா கூட்டணியில் சமாஜ்வாதி கட்சி 37 இடங்கள், திரிணாமுல் காங்கிரஸ் 29 இடங்கள், திமுக 22 இடங்கள், தாக்கரே சிவசேனா 9 இடங்கள், சரத் பவார் என்சிபி 8 இடங்கள், ஆர்ஜேடி 4 இடங்கள், சிபிஎம் 4 இடங்கள், IUML மற்றும் ஆம் ஆத்மி, ஜார்க்ண்ட் முக்தி மோர்ச்சா தலா 3 இடங்கள், விசிக மற்றும் சிபிஐ, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி தலா 2 இடங்களில் வென்றுள்ளன.