பொறுப்பேற்றார் துணைக் குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்! வந்தார் முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர்!!

 

உடல்நிலை காரணமாக பதவி விலகுவதாக முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் அறிவித்த நிலையில், அடுத்த துணைக் குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. பாஜக கூட்டணி சார்பில் மஹாராஷ்ட்ரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனும் இந்தியா கூட்டணி சார்பில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டியும் போட்டியிட்டனர். தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, சபாநாயகர் ஓம்.பிர்லா, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய்,  முன்னாள் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர்கள் வெங்கய்யா நாயுடு, ஜெகதீப் தன்கர் மற்றும் எல்,முருகன் உள்ளிட்ட ஒன்றிய அமைச்சர்கள் கலந்து கொண்டனர். ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பாஜக கூட்டணித் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை சவுந்தரராஜன் போன்ற முன்னணித் தலைவர்களும் பங்கேற்றனர். தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் பற்றி பல்வேறு தகவல்கள் வந்த நிலையில் துணைக் குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனின் பதவியேற்பு விழாவில் பங்கேற்றது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.