கார் விபத்தில் மாயமான வெற்றி துரைசாமியின் உடல் 8 நாட்களுக்குபின் மீட்பு.. அதிர்ச்சியில் குடும்பத்தினர்

 

விபத்தில் சிக்கி மாயமான வெற்றி துரைசாமியின் உடல் 8 நாட்களுக்கு பின் மீட்கப்பட்டுள்ளது.

எம்ஜிஆரின் அபிமானி, அதிமுகவில் முக்கிய நிர்வாகியாக இருந்தவர் சைதை துரைசாமி. இவர் மனிதநேயம் ஐஏஎஸ் அகாடமி என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இவருக்கு மல்லிகா என்ற மனைவியும் வெற்றி துரைசாமி என்ற மகனும் உள்ளனர். 45 வயதான வெற்றி துரைசாமி தொழில் அதிபர் ஆவார். சினிமா துறையிலும் ஆர்வம் கொண்ட வெற்றி துரைசாமி கடந்த 2021-ம் ஆண்டு விதார்த், ரம்யா நம்பீசன் நடிப்பில் வெளியான ‘என்றாவது ஒரு நாள்’ என்ற படத்தையும் இயக்கினார்.

பிரபல இயக்குநர் வெற்றிமாறனிடம் பயிற்சி பெற்ற வெற்றி துரைசாமி, இமாசல பிரதேசத்தில் உள்ள லடாக் பகுதிக்கு சுற்றுலா சென்றார். அவருடன் திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதியைச் சேர்ந்த உதவியாளர் கோபிநாத் என்பவரும் சென்றிருந்தார். கடந்த 4-ம் தேதி மாலை அங்கிருந்து சென்னை திரும்புவதற்காக வெற்றி துரைசாமி காரில் விமான நிலையம் புறப்பட்டார்.

இந்த நிலையில் கார், கஷங் நாலா என்ற மலைப்பகுதியில் வந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து 200 அடி பள்ளத்தாக்கு பகுதியில் விழுந்து, அருகே ஓடிக்கொண்டிருந்த சட்லஜ் நதிக்குள் பாய்ந்தது. இந்த விபத்தில் கார் ஓட்டுநர் தஞ்ஜின் உயிரிழந்தார். மேலும் கோபிநாத் படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டார். ஆனால், வெற்றி துரைசாமியை காணவில்லை. அவரை தேடுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தன.

இதனிடையே விபத்து நடந்த இடத்தில் இருந்த ரத்த கறைகள், திசுக்கள் சேகரிக்கப்பட்டு டிஎன்ஏ சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், விபத்தில் சிக்கி மாயமான வெற்றி துரைசாமியின் உடல் மீட்கப்பட்டுள்ளது. 8 நாட்களுக்கு பிறகு வெற்றி துரைசாமியின் உடலை மீட்பு படையினர் மீட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட வெற்றி துரைசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் சென்னை கொண்டுவரப்பட உள்ளது.