வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் தேர் திருவிழா.. புதுச்சேரியில் நாளை உள்ளூர் விடுமுறை..!

 

வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோயில் தேரோட்டத்தையொட்டி புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மரமே மூலவராக விளங்கும் ஆலயம், மீனவ சமுதாயத்தின் காவல் தெய்வம், புதுச்சேரி மாநிலத்தின் புகழ்பெற்ற அம்மன் ஆலயம் என பல்வேறு பெருமைகள் கொண்ட திருக்கோவிலாகத் திகழ்வது, புதுச்சேரி வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் ஆலயம்.

ஆண்டுதோறும் எல்லாக் கோவில்களில் விழாக்கள் நடைபெறுவதும், அதில் முக்கிய விழாவாகத் தேர்த் திருவிழா கொண்டாடப்படுவதும் வழக்கமான ஒன்றுதான். ஆனால் செங்கழுநீர் அம்மன் ஆலயத்தில் நடைபெறும் தேர்த் திருவிழாவை, மாநில ஆளுநரும், முதல்வரும் சேர்ந்தே வடம் பிடித்து இழுத்து வைப்பார்கள். இது இன்று, நேற்றல்ல.. பிரெஞ்சு ஆட்சிக்காலத்தில் இருந்தே தொடர்ந்து நடைபெற்று வரும் வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டிற்கான தேரோட்டம் கடந்த 10-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை கோலாகலமாக நடைபெற உள்ளது. நாளை காலை தேரோட்டத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் வடம்பிடித்து தொடங்கி வைக்க உள்ளனர்.

இந்நிலையில் தேரோட்டத்தை முன்னிட்டு நாளை வெள்ளிக்கிழமை (18.08.2023) புதுச்சேரியில் பள்ளிகளுக்கு மட்டும்விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.