ஒடிசாவில் லாரி மீது வேன் மோதி கோர விபத்து.. 8 பேர் பரிதாப பலி!!

 

ஒடிசாவில் கனரக லாரி மீது வேன் மோதிய கோர விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் கேயோஞ்சிஹர் மாவட்டம், காடகன் பகுதியில், இன்று காலை தேசிய நெடுஞ்சாலை எண் 20ல் வேன் - கனரக லாரி மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

சாலையோரம் இரும்பு தாது பாரம் ஏற்றிய கனரக லாரி நிறுத்திவைக்கப்பட்டு இருந்துள்ளது. அச்சமயம், கஞ்சம் மாவட்டத்தில் உள்ள போதமரி கிராமத்தில் இருந்து தேவி மா தாரணி கோவிலுக்கு, இரண்டு குடும்பத்தை சேர்ந்த 20 பேர் வேனில் பயணம் செய்துள்ளனர். இவர்கள் பயணித்த வாகனம் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்ட லாரியின் மீது மோதி விபத்தில் சிக்கி இருக்கிறது.

விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கேயோஞ்சிஹர் போலீசார், மீட்பு பணிகளில் ஈடுபட்டு காயமடைந்த 7 பேரை மீட்டு காடகன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பலியானோரின் உடல் மீட்டு பிரேத பரிசோதனைக்காகவும் அனுப்பி வைக்கப்பட்டது.

தேசிய நெடுஞ்சாலையில் விதிமுறைகளை மீறி நிறுத்தப்படும் லாரியில் இவ்வாறான விபத்துகள் நேருவதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கேயோஞ்சிஹர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குஸல்கர் நிதின் தலைமையிலான அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் கண்காணிப்பாளரும் விபத்து நடந்த இடத்தை நேரில் வந்து பார்வையிட்டார்.

வாகனத்தை இயக்கிய ஓட்டுநர் பனிமூட்டம் நிலவியபோதும், வேகமாக பயணம் செய்ததே விபத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. அதேபோல, தேசிய நெடுஞ்சாலையில் விதிகளை மீறி லாரியை நிறுத்தியதும் விபத்தை ஏற்படுத்த வழிவகை செய்துள்ளது.