யுபிஐ ஏடிஎம் அறிமுகம்.. பணம் எடுப்பது எப்படி? வழிகாட்டுதல் வீடியோ வெளியீடு
டெபிட் கார்டுகள் உதவியின்றி யுபிஐ-ஏடிஎம் ஹிட்டாச்சி பேமண்ட் சர்வீசஸ் மூலம் பணம் எடுக்கும் வசதி முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் டிஜிட்டல் மயமாகி இருக்கும் நிலையில், அனைத்து பண பரிவர்த்தனைகளை ஆன்லைன் மூலமாக நடைபெற தொடங்கி இருக்கிறது. முன்னதாக டெபிட் கார்டு இல்லாமல் பணம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு, மக்கள் மத்தியில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து டெபிட் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டெபிட் கார்டுகள் உதவியின்றி யுபிஐ மூலம் ஏடிஎம்-ல் பணம் எடுக்கும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இதனை பயன்படுத்தி ஒரு நபர் பணம் எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
நாட்டின் முதல் யுபிஐ-ஏடிஎம் ஹிட்டாச்சி பேமண்ட் சர்வீசஸ் மூலம் ஒயிட் லேபிள் ஏடிஎம் மும்பையில் அறிமுகப்படுத்தப்பட்டது. நேஷனல் பேமண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) உடன் இணைந்து செயலாக்கத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது இந்த ஏடிஎம். இந்நிலையில், இதில் ஃபின்டெக் இன்ஃப்ளூயன்சர் ஒருவர் யுபிஐ ஏடிஎம்-ல் பணம் எடுக்கும் வீடியோ மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில் யுபிஐ கார்டுலெஸ் கேஷ் ஆப்ஷனை அவர் தேர்வு செய்கிறார். தொடர்ந்து ரூ.100, 500, 1000, 2000, 5000 மற்றும் இதர தொகை என பயனர் எவ்வளவு பணம் எடுக்க வேண்டும் என்பது திரையில் காட்டப்படுகிறது. அதில் பயனர்கள் தங்களுக்கு தேவையான தொகையை தேர்வு செய்ய வேண்டும். அதன் பின்னர் திரையில் க்யூஆர் கோட் வருகிறது. அதை பயனர்கள் தங்கள் போனில் உள்ள யுபிஐ செயலி மூலம் ஸ்கேன் செய்து, பணம் எடுக்கப்படுவது குறித்து உறுதி செய்ய வேண்டும். பின்னர் யுபிஐ ரகசிய குறியீட்டு எண்ணை உள்ளிட வேண்டும். அது வெற்றி பெற்றதும் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பயனர்கள் பணம் பெற முடிகிறது.