2 இளம்பெண்கள் பரிதாப பலி.. ஆற்றில் குளிக்க சென்ற போது நேர்ந்த விபரீதம்!

 

கேரளாவில் ஆற்றில் குளித்த 2 இளம்பெண்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் கரிம்புழா ஆறு உள்ளது. இந்த ஆற்றில் கூட்டி லக்கடவு என்ற பகுதியில் சிலர் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது செர்புளச்சேரி குட்டிக்கோடு பகுதியை சேர்ந்த முஸ்தபா என்பவரின் மகள் ரிஸ்வானா (19), கரக்குறிச்சியை சேர்ந்த அபுபக்கர் என்பவரின் மகள் டிமா மெப்பா (20) என்ற 2 இளம்பெண்கள் மற்றும் பாதுஷா என்ற சிறுவன் ஆகிய 3 பேரும் ஆற்றில் மூழ்கினர்.

இதனை அங்கு குளித்துக்கொண்டிருந்தவர்கள் பார்த்து காப்பாற்ற முயன்றனர். ஆனால் 3 பேரும் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அதனையறிந்த அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேரையும் மீட்டு வட்டம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் ரிஸ்வானா மற்றும் டிமா மெப்பா ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். சிறுவன் பாதுஷா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். ஆற்றில் குளித்த 2 இளம்பெண்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பலியான சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.