சாலையோரம் அமர்ந்து இருந்த 2 பேரை திடீரென தாக்கிய குள்ளநரி.. அதிர்ச்சி வீடியோ!
மத்திய பிரதேசத்தில் சாலையோரம் அமர்ந்து இருந்த 2 பேரை குள்ளநரி தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மத்திய பிரதேச மாநிலம் செஹோர் மாவட்டத்தில் ரெஹ்தி தாலுகாவில் சகோனியா பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் நேற்று மாலை 5 மணியளவில் குடியிருப்புவாசிகள் வசிக்கும் பகுதியில் 2 பேர் சாலையோரம் அமர்ந்து இருந்தனர். அப்போது, குள்ளநரி ஒன்று அவர்களை நோக்கி ஓடி வந்தது. அது அருகே வந்ததும் அவர்கள் 2 பேரும் உஷாராகி எழுந்து ஓட முயன்றனர். எனினும், அவர்களில் ஒருவரை விடாமல் துரத்தி தாக்கியது. அவர் கற்களை எடுத்து வீசி அதனை விரட்டியடிக்க முயன்றுள்ளார்.
ஆனால் அவரை விடாமல் தாக்கிய குள்ளநரி, ஒரு கட்டத்தில் அவரை கவ்வி பிடித்து கொண்டது. ஆனால், உடனடியாக செயல்பட்ட அவர், அதனை 12 அடி தூரத்திற்கு வீசி எறிந்து விட்டார். இந்த சம்பவத்தில் காயமடைந்த ஷியாம் யாதவ் மற்றும் நர்மதா பிரசாத் ஆகிய 2 பேரும் நர்மதாபுரம் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபற்றிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
வனப்பகுதியால் கிராமம் சூழப்பட்டு உள்ளது. குள்ளநரி பதுங்கியிருந்து மீண்டும், எந்நேரமும் தாக்குதல் நடத்த கூடிய ஆபத்து உள்ளது. இதனால், அந்த கிராமவாசிகள் அச்சத்தில் உள்ளனர். அவர்களில் பலர் வீடுகளை விட்டு வெளியே செல்லும்போது, கைகளில் பாதுகாப்புக்காக தடிகளை கொண்டு செல்கின்றனர். மற்றொரு சம்பவத்தில், சல்கான்பூர் பகுதியில் குள்ளநரி ஒன்று நேற்று 5 பேரை தாக்கின. இதில், 2 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.