பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 சிறுவர்கள் பரிதாப பலி.. உத்தர பிரதேசத்தில் பயங்கரம்!

 

உத்தரபிரதேசத்தில் பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் கெல்வாடா கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் மேல்மாடியில் பட்டாசுக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசுக் கடையில் இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஹிமான்ஷு (12), பராஸ் (14) ஆகிய இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர்.

இந்த வெடி விபத்தில் மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயமடைந்த நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்த விபத்தில் உயிரிழந்த 2 சிறுவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வீட்டின் உரிமையாளர் ஷதாப் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.