ராஜஸ்தானில் வேன் மீது லாரி மோதி கோர விபத்து.. 9 பேர் பலி!
ராஜஸ்தானில் திருமண நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு வந்தவர்களின் வேன் மீது லாரி மோதிய விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் தங்கிரி பகுதியில் சனிக்கிழமை திருமண நிகழ்வு நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக ராஜஸ்தான் மாநிலம் துகர்கான் பகுதியைச் சேர்ந்தவர்கள் வேனில் சென்றனர். திருமணம் முடிந்து அவர்கள் அனைவரும் அதே வேனில் சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களுடைய வேன் ஜலாவர் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக அதன் மீது வேகமாக வந்த லாரி பயங்கரமாக மோதியது. இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. பலியானவர்கள் அனைவரும் பக்ரி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று அக்லேரா காவல் நிலையப் பொறுப்பாளர் சந்தீப் பிஷ்னோய் தெரிவித்தார்.
விபத்து குறித்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல்கள் அக்லேரா சமூக சுகாதார நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக ராஜஸ்தான் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.