சுற்றுலா பேருந்து மீது லாரி மோதி கோர விபத்து.. 8 பேர் உடல் நசுங்கி பலி.. 15 பேர் படுகாயம்

 

ஆந்திராவில் சுற்றுலா பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 8 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வடபழனியில் இருந்து சுற்றுலா பேருந்து ஒன்று 23 பயணிகளுடன் நேற்றிரவு ஐதராபாத் புறப்பட்டு சென்றது. அந்த பேருந்து ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டம் முசுனூர் சுங்கச்சாவடி அருகே  சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்திசையில் இரும்பு ஏற்றிக் கொண்டு வந்த லாரி சாலையோரத்தில் நின்ற லாரியை கவனிக்காமல் வேகமாக வந்தது.

அருகே வந்ததும் நின்று கொண்டிருந்த லாரியை கவனித்த இரும்பு லாரியின் ஓட்டுநர் விபத்தை தடுக்கும் பொருட்டு அந்த லாரியை வேகமாக திருப்பியுள்ளார். அப்போது எதிர்திசையில் வந்து கொண்டிருந்த சுற்றுலா பேருந்து மீது அந்த லாரி பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் பேருந்தின் முன் பகுதி முற்றிலுமாக  உருக்குலைந்தது. அப்போது பேருந்தில் அமர்ந்திருந்த  8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 15 பேர் பலத்த  காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.