நின்றிருந்த பேருந்து மீது லாரி மோதி கோர விபத்து.. 11 பேர் உடல் நசுங்கி பலி.. ராஜஸ்தானில் பரபரப்பு!

 

ராஜஸ்தானில் இன்று அதிகாலை நடந்த சாலை விபத்தில் 6 பெண்கள் உள்பட 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் புஷ்கர் நகரில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் விர்ந்தவன் நகருக்கு இன்று அதிகாலை பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 25-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். அதிகாலை 4.30 மணியளவில் ராஜஸ்தானின் பாரத்பூர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் சென்றபோது திடீரென பேருந்து பழுதாகி நின்றது.

இதனால், ஓட்டுநர், பயணிகள் உள்ளிட்டோர் பேருந்தில் இருந்து கீழே இறங்கி சாலையில் பேருந்தின் பின்புறம் நின்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த லாரி சாலையில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. 

இந்த கோர விபத்தில் பேருந்து பயணிகள் 11 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 12-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

உயிரிழந்த 11 பேரில் 5 பேர் ஆண்கள், 6 பேர் பெண்களாவர். சம்பவ இடத்துக்கு காவல் கண்காணிப்பாளர் மிருதுள் கச்சாவா நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.