தொடரும் சோகம்.. நீட் தேர்வுக்கு பயந்து மாணவர் தற்கொலை.. உருக்கமான கடிதம் சிக்கியது!!

 

புதுவையில் நீட் தேர்வுக்கு பயந்து மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி அண்ணாநகர் 8-வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் துரைராஜ். ரியல் எஸ்டேட் செய்து வருகிறார். இவரது மனைவி பரிமளம். இவர் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் பிசியோதெரபி மருத்துவராக உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக கணவன் - மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு பிரியதர்ஷினி என்ற மகளும், ஹேமச்சந்திரன் (20) என்ற மகனும் உள்ளனர். இவர்கள் இருவரும் தற்போது தாயுடன் வசிக்கின்றனர்.

ஏற்கனவே 2 முறை நீட் நுழைவுத்தேர்வு எழுதிய ஹேமச்சந்திரன், அதில் குறைந்த மதிப்பெண்களே பெற்றிருந்தார். தற்போது 3-வது முறையாக நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார். இன்று நீட் தேர்வு நடந்தது. எனவே நேற்று இரவு ஹேமச்சந்திரன் மிகுந்த மனஅழுத்தத்துடன் இருந்தார். எனவே பரிமளமும், அவரது மகள் பிரியதர்ஷினியும் அவருக்கு நீட் தேர்வு எழுதுவது குறித்து ஆலோசனைகள் கூறி வந்தனர்.

இந்த நிலையில் இன்று காலையில் பிரியதர்ஷினி பார்த்த போது ஹேமச்சந்திரனின் அறை திறக்கவில்லை. ஜன்னல் வழியாக பார்த்த போது அவர் தற்கொலை செய்து தூக்கில் பிணமாக தொங்கியது தெரியவந்தது. உடனே அவர் இது குறித்து உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

அப்போது மாணவர் தற்கொலை செய்து கொண்ட அறையில் அவரது கைப்பட ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கடிதம் இருந்தது. அதில், “நாம் அனைவரும் ஒரே இடத்தில் வசித்தாலும் நான் மட்டும் தனியாக இருக்கிறேன். நான் இதுவரை வாழவே இல்லை. அதனால் வெளியேறி விடுகிறேன். எனது அம்மாவை யாரும் குறை கூற வேண்டாம். இது என்னுடைய முடிவு” என்று எழுதப்பட்டு இருந்தது. இந்த சம்பவம் புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.