கேரளாவில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து.. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு வயது குழந்தை உள்பட 4 பேர் பரிதாப பலி!

 

கேரளாவில் சுற்றுலா வேன் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த குழந்தை உள்பட 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த ஒரு பிரஷர் குக்கர் நிறுவனம் தனது ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சுற்றுலா ஏற்பாடு செய்தது. அதன்படி ஒரு வேனில் சுமார் 15-க்கும் மேற்பட்டோர் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் கேரள மாநிலம் மூணாறு மற்றும் ஆனக்குளம் ஆகிய பகுதிகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர். 

பின்னர், நேற்று மாலை ஊர் திரும்பிக் கொண்டிருந்த இவர்கள் இடுக்கி மாவட்டம் மாங்குளம் பகுதியில் வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் இருந்த 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரு வயது குழந்தை உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 13 பேர் படுகாயமடைந்தனர். 

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  மீட்பு குழுவினர், படுகாயமடைந்தவர்களை மீட்டு, அடிமலி தாலுகா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர்களில் இருவர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து  வழக்கு பதிவு செய்த இடுக்கி மாவட்ட போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறனர். மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் அபினேஷ் மூர்த்தி (40), அவருடைய ஒரு வயது மகன் தன்விக், தேனியை சேர்ந்த குணசேந்திரன் (71), ஈரோட்டை சேர்ந்த பி.கே.சேது என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.