ஆதார் - பான் இணைக்க இன்றே கடைசி நாள்; தவறினால் என்ன நடக்கும்?

 

பான் கார்டு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடைவதால், இணைக்காதவர்கள் ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் இணைக்க நேரிடும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பான் கார்டு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி அறிவிக்கை வெளியிட்டது. அதன்பிறகு ஆதார் - பான் இணைப்புக்கான அவகாசம் பல முறை நீட்டிக்கப்பட்டது. குடிமக்களுக்கு ஆதார் அட்டை வழங்குவதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் வருமான வரி செலுத்துவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்றும் தீர்ப்பளித்தது.

இதன் பிறகு பான் கார்டு வைத்திருக்கும் அனைவரும் தங்களது பான் எண்னை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என ஒன்றிய அரசு திட்டவட்டமாக தெரிவித்தது. பல முறை ஆதார் பான் இணைப்பிற்கான கால அவகாசத்தை நீட்டிப்பு செய்த ஒன்றிய அரசு இந்த முறை நீட்டிக்காமல் ஜூன் 30-ம் தேதியான இன்றக்குள் இணைக்க வேண்டும் என அறிவித்துள்ளது.

இன்றுடன் அவகாசம் நிறைவடைவதால், ஆதாருடன் பான் கார்டு எண்ணை இணைக்காதவர்கள், ஆயிரம் ரூபாய் அபராத தொகை செலுத்திய பிறகே இணைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதாருடன் பான் கார்டை இணைக்காத பட்சத்தில் நாளை முதல் பான் கார்டு எண் செயல்படாது. மேலும், செயல்படாத பான் கார்டு எண்ணை வைத்து வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய முடியாது.

டிடிஎஸ் பிடித்தம் மற்றும் டிசிஎஸ் ஆகியவற்றின் விகிதம் அதிகரிக்கப்படும். வங்கி ஆவணங்களுக்கு பான் எண் அத்தியாவசியம் என்பதால், வங்கிக் கணக்கை திறக்கவும் சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும். மேலும், புதிய கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளை பெற முடியாது. பாஸ்போர்ட் பெறுவதற்கு பான் கார்டு கட்டாயம் என்பதால் வெளிநாடு பயணம் செல்ல முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.