துணைமின் நிலைய சுவர் இடிந்து 3 பேர் பலி.. புதுச்சேரியில் பரபரப்பு

 

புதுச்சேரியில் வாய்க்கால் தூர்வாரும் பணியின் போது சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், முதலியார்பேட்டை மரப்பாலத்தில் இருந்து நயினார் மண்டபம் வரை வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

அதன்படி, வசந்த் நகர் பகுதியில் 2வது குறுக்கு தெருவில் வாய்க்கால் சீரமைக்கப்பட்டு அதில் உள்ள சேற்றுகள் அகற்றப்பட்டு வாய்க்கால் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. அப்போது துணை மின் நிலைய பின்புற சுவர், அதாவது 33 ஆண்டுகள் பழமையான சுற்று சுவர் இருந்தது. அங்கு பள்ளம் தோண்டும்போது சுற்று சுவர் பாரம் தாங்கமால் அவர்கள் மீது சாய்ந்தது.

இதில் 4 குழுக்களாக தொழிலாளர்கள் பணியாற்றி கொண்டிருந்தார்கள், 16-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி கொண்டிருந்த நிலையில், அவர்கள் மீது சுவர் விழுந்தது. இதில் 10-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடினார்கள். ஆனால் 6 பேர் உள்ளே சிக்கிக் கொண்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்பு பணியில் ஈடுப்பட்டனர். அதில் 3 பேரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல் பாக்யராஜ், பாலமுருகன், மற்றொரு பாலமுருகன் ஆகிய 3 பேர் மிக மோசமான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்கள் மூவரும் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தற்போது வரை 3 தொழிலாளர்கள் இறந்த நிலையில், இவர்கள் ஆத்தூர், திருவண்ணாமலை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளனர். மேலும் தொழிலர்கள் பாதிக்கப்பபட்டு உள்ளனரா என்று தீயணைப்புத் துறையினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.