குடிசை தீப்பற்றியதில் 3 பெண் குழந்தைகள் பரிதாப பலி.. உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

 

உத்தர பிரதேசத்தில் குடிசை வீட்டில் பற்றிய தீ காரணமாக 3 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா செக்டர் 8 பகுதியில் ஏராளமான ஏழைகள், குடிசை வீடுகள் மற்றும் தகர வீடுகள் அமைத்து தங்கி உள்ளனர். இவர்களுக்கு மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் இருந்தாலும், போதுமான அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருகின்றனர். இங்கே மெயின்பூர் பகுதியைச் சேர்ந்த இ-ரிக்சா ஓட்டுநர் ஒருவர், மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீடு ஒன்றில் வசித்து வந்தார்.

இன்று அதிகாலை 3 மணி அளவில், இவர்களது வீட்டில் தீப்பற்றி எரிவதாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

இதையடுத்து மீட்புப் படையினர் உள்ளே சென்று பார்த்த போது, 3 பெண் குழந்தைகள் படுக்கையில் தீயில் எரிந்து உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது. பலத்த காயங்களுடன் வீட்டிற்குள் இருந்த அவரது தந்தை மற்றும் தாயாரை மீட்ட மீட்புப் படையினர் அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த நிலையில் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு 3 சிறுமிகளும் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.