கோவில் உண்டியலில் சிக்கிய திருடனின் கை.. இரவு முழுவதும் கண்ணீர் சிந்திய சம்பவம்

 

தெலுங்கானாவில் கோயிலில் திருட முயன்ற போது உண்டியலில் கை சிக்கியதால், தப்ப முடியாமல் திருடன் இரவு முழுவதும் கண்ணீர் சிந்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டம் பிக்னூர் மண்டலத்தில் ராமேஸ்வரப்பள்ளி கிராமத்தில் மசுபல்லே போஷம்மா என்ற கோவில் அமைந்தள்ளது. இந்தக் கோவிலில் சுரேஷ் என்பவர் பணிபுரிந்து வந்தார். உண்டியல் பணத்தை கொள்ளையடிக்க வேண்டும் என திட்டம் தீட்டி வந்த அவர் கடந்த திங்கள் கிழமை இரவு 10 மணியளவில் கோவிலுக்குள் நுழைந்துள்ளார்.

கோவில் கருவறைக்கு முன் உள்ள ஆளுயர உண்டியில், பணம் போடும் பகுதியை லேசாக உடைத்து தனது இடது கையை உள்ளே விட்டுள்ளார். உள்ளே எளிதாக போன கையால் பணத்தை அள்ளிய அவர், வெளியே எடுக்க முடியாமல் திணறியுள்ளார். அவரது கை வசமாக உள்ளேயே சிக்கிக் கொண்டது. யாரும் வரும் முன் தனது கையை எடுத்துவிட வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொண்ட அவருக்கு தோல்வியே கிடைத்தது.

இரவு 11 மணி முதல் மறுநாள் காலை 10 மணி வரை சுமார் 12 மணி நேரம் கையை எடுக்க முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார். காலையில் பூசாரி மற்றும் மற்ற ஊழியர்கள் கோயிலை திறந்து பார்த்தபோது, ​​சுரேஷ் உண்டியல் அருகே நிற்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின் உள்ளே கை மாட்டிக் கொண்டிருப்பதை கண்டதும் தான் உண்மை என்ன என்பது அவர்களுக்குத் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கட்டர் மூலம் உண்டியைலை உடைத்து அவரை விடுவித்தனர். பின்னர் அவரை கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.