ஆம்புலன்ஸ் இல்லை... உடலை 15 கி.மீ தூரம் பைக்கில் கொண்டு செல்லப்பட்ட அவலம்! அதிர்ச்சி வீடியோ

 

மத்தியப் பிரதேசத்தில் அமரர் ஊர்தி கிடைக்காததால்  சடலத்தை 15 கி.மீ தூரம் மோட்டார் சைக்கிளில்  எடுத்துச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மத்தியப் பிரதேச மாநிலம் ஷாஹ்டோல் மாவட்டம் துர்வார் கிராமத்தைச் சேர்ந்தவர் லாலுய்யா பைகா (56). இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள  அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பைகா உயிரிழந்தார்.

அவரது உடலை மருத்துவமனையில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள துர்வார் கிராமத்திற்கு எடுத்துச் செல்ல அமரர் ஊர்தி வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்டனர். ஆனால், அமரர் ஊர்தி வழங்கப்படவில்லை.

இதனால் இறந்தவரின் உடலை எப்படி கிராமத்திற்குக் கொண்டு செல்வது எனத் தெரியாமல் குடும்பத்தினர் தவித்தனர். இதையடுத்து வேறு வழியின்றி தங்களிடம் இருந்த பைக்கிலேயே பைகாவின் உடலைக் கொண்டு சென்று விடலாம் என்று முடிவு செய்தனர்.