திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த முறைபெண்.. கத்தியால் குத்திய முறைபையன்.. உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!
உத்தர பிரதேசத்தில் திருமணம் செய்ய மறுத்த முறைபெண்ணை கத்தியால் முறைபையன் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பண்டா மாவட்டம் டி.எம்.காலணி பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (26). இவருக்கு 25 வயதுடைய முறைபெண் உள்ளார். இருவரும் ஒரே கல்லூரியில் சட்டம் பயின்று வந்தனர். அந்த பெண் பிரகாஷின் வீட்டில் தங்கி படித்து வருகிறார். பிரகாஷ் தனது முறைபெண்ணை சில வருடங்களாக ஒரு தலையாக காதலித்து வந்து இருக்கிறார்.
இந்த நிலையில், நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பிரகாஷ் வற்புறுத்தி உள்ளார். ஆனால் அதற்கு முறைபெண் மறுத்துள்ளார். இதையடுத்து திருமணத்திற்கு மறுத்ததால் அவரை அருகில் இருந்த கத்தியால் கழுத்தில் குத்திவிட்டு பிரகாஷ் தப்பி சென்றுள்ளார்.
அப்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வீட்டிற்குள் வந்தனர். அப்போது அந்த பெண் ரத்த வெள்ளத்தில் படுகாயத்துடன் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அந்த பெண்ணை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தப்பி சென்ற பிரகாஷை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.