பகீர் வீடியோ.. சிறுத்தை மீது சவாரி.. செல்ஃபி எடுத்துக்கொண்ட கிராம மக்கள்!
மத்தியப் பிரதேசத்தில் உடல் நலமில்லாமல் இருந்த சிறுத்தையுடன் கிராம மக்கள் விளையாடியதோடு செல்ஃபி எடுத்துக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் திவாஸ் மாவட்டத்தில் உள்ள இக்லேரா கிராமத்தில், வனப்பகுதி அருகில் இருக்கிறது. இந்த வனப்பகுதிக்குள் சிறுத்தை போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அப்பகுதி மக்கள் விறகு போன்ற பொருள்களைச் சேகரிக்க வனப்பகுதிக்குள் செல்வது வழக்கம்.
அப்படிச் சென்றபோது சிறுத்தை ஒன்று மிகவும் சோர்வான நிலையில் நடக்க முடியாமல் நடந்து வந்து கொண்டிருந்தது. உடனே பொதுமக்கள் சிறுத்தையைப் பார்த்து ஆரம்பத்தில் அச்சமடைந்தனர். ஆனால், பொதுமக்களைப் பார்த்த பிறகும் சிறுத்தை அவர்களைத் தாக்க முயலவில்லை.
உடனே கிராம மக்கள் துணிந்து சிறுத்தை அருகில் சென்றனர். அவர்கள் சிறுத்தையைத் தொட்டபோதும் யாரையும் தாக்கவில்லை. சிறுத்தை உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது. உடனே கிராம மக்கள் ஒன்றுசேர்ந்து சிறுத்தையை வளர்ப்பு பிராணி போன்று நடத்தினர். அவர்கள் சிறுத்தையுடன் சேர்ந்து விளையாடினர். அதிகமானோர் சிறுத்தையுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.
சிலர் சிறுத்தை மீது ஏறி சவாரி செய்யவும் முயன்றனர். சிறுத்தை உடல்நலம் பாதிக்கப்பட்டு கிராம மக்களிடம் சிக்கி சித்ரவதைக்கு ஆளாவது குறித்து சிலர் வனத்துறைக்குத் தகவல் கொடுத்தனர். உடனே வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கிராம மக்களை அங்கிருந்து விரட்டி விட்டுவிட்டு சிறுத்தையைச் சோதித்தபோது அது மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தது.