ஒன்றிய அமைச்சர் வீட்டில் தூப்பாக்கிச்சூடு.. அமைச்சர் மகனின் நண்பர் மரணம்.. உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி!

 

உத்தர பிரதேசத்தில் ஒன்றிய அமைச்சர் கவுஷல் கிஷோரின் வீட்டில் அதிகாலையில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் கவுஷல் கிஷோர். இவருக்கு விகாஸ் கிஷோர் என்ற மகன் உள்ளார். இவரது வீடு உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ளது. இங்கு இளைஞர் ஒருவர் துப்பாக்கி குண்டு பட்டு தலையில் காயங்களுடன் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை தொடங்கியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் அமைச்சரின் மகனான விகாஸ் கிஷோரும், உயிரிழந்த வினய் ஸ்ரீவத்சவா நண்பர்கள் என தெரிய வந்துள்ளது.

அதுமட்டுமின்றி சம்பவ நடந்த இடத்திலிருந்து விகாஸ் கிஷோரின் துப்பாக்கியும் சிக்கியிருப்பதால் சந்தேகம் வலுத்துள்ளது. மேலும், இரவு 6 பேர் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்டதும் அதற்கு பின்னரே இந்த கொலை நடந்திருப்பதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

இதனிடையே துப்பாக்கி தன் மகன் விகாஷ் உடையது தான் என கூறிய ஒன்றிய அமைச்சர் ஆனால் சம்பவம் நடந்த போது தன் மகன் வீட்டில் இல்லை என்றும் டெல்லியில் இருந்ததாகவும் ஒன்றிய அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

இதற்கிடையே உயிரிழந்த வினய் ஸ்ரீவத்சவா மரணம் குறித்து விசாரணை நடத்தும்படி அவரது சகோதரர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பின் தற்போது வழக்குப் பதிவு செய்து விகாஸ் நண்பர்கள் மூவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். ஒன்றிய அமைச்சரின் மகன் எங்கு உள்ளார்? என்பது குறித்த தகவல் தற்போது வரை வெளியாகவில்லை.