குடும்பத்தை பிரித்த தக்காளி.. ஓட்டல்காரரை விட்டு மனைவி ஓட்டம்.. மத்திய பிரதேசத்தில் பகீர் சம்பவம்!!

 

மத்திய பிரதேசத்தில் வெறும் 2 தக்காளியால் ஏற்பட்ட சண்டையில் ஓட்டல்காரரை விட்டு விட்டு மகளுடன் அவரது மனைவி வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் எப்போதும் விலை குறைவாக காணப்படும் தக்காளி இப்போது உச்சம் தொட்டுள்ளது. தமிழ்நாட்டில் தக்காளி ஒரு கிலோ 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் சில இடங்களில் தக்காளி விலை கிலோ 150 முதல் 200 ரூபாய் வரை விற்பனையாகியது. இதனால் இல்லத்தரசிகர்கள் மிகுந்த கவலைக்குள்ளாகி உள்ளனர். சமையலில் முக்கிய பொருளாக தக்காளி இருக்கும் நிலையில் இந்த விலையேற்றம் என்பது இல்லத்தரசிகளை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.

இதன் காரணமாக குடும்பத்தின் மாத பட்ஜெட்டில் தக்காளி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சில குடும்பங்கள் உணவில் சேர்க்கும் தக்காளியின் அளவை குறைத்துள்ளன. ஓட்டல்களில் தக்காளி சட்னி, தக்காளி சாதம் உள்ளிட்டவற்றை தயாரிப்பதும் பல இடங்களில் கைவிடப்பட்டுள்ளது. அதோடு தங்கத்துக்கு நிகராக கருதப்படும் தக்காளியை பாதுகாக்க வியாபாரிகள், விவசாயிகள் பாதுகாவலர்களை நியமிக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் தான் தற்போது அதிர்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் ஷாஹோல் மாவட்டத்தை சேர்ந்தவர் சஞ்சீவ் பர்மன். இவர், காலை நேர உணவு தயாரித்து வழங்கும் ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். விலையேற்றம் காரணமாக சஞ்சீவ் பர்மனும் தக்காளி பயன்பாட்டை குறைத்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில் சஞ்சீவ் பர்மனின் மனைவி 2 தக்காளியை தனியே எடுத்து வைத்து இருந்தார். இதனை பார்த்த சஞ்சீவ் பர்மன் அதனை எடுத்து ஓட்டலுக்கான உணவை சமைக்க பயன்படுத்தினார். இதுபற்றி அறிந்த அவரது மனைவி கோபமடைந்தார். விலையேற்றத்துக்கு நடுவே தன்னிடம் கேட்காமல் ஏன் 2 தக்காளியை சமையலில் பயன்படுத்துகிறீர்கள்? என அவர் கேள்வி எழுப்பினார்.

இது வாக்குவாதமாக மாறியது. இந்த வாக்குவாதம் முற்றி எல்லை மீறி சண்டையாக மாறியது. இதனால் கோபமடைந்த சஞ்சீவ் பர்மனின் மனைவி வீட்டை விட்டு வெளியேறி சென்றார். அப்போது அவர் தனது மகளையும் அழைத்து சென்றுவிட்டார். இதற்கிடையே மனைவி வீட்டுக்கு திரும்பி வந்துவிடுவார் என சஞ்சீவ் பர்மன் நம்பியிருந்தார். ஆனால் அவர் வரவில்லை. இதையடுத்து அவரை சஞ்சீவ் பர்மன் ஆங்காங்கே தேடிப்பார்த்தார். உறவினர்களிடம் விசாரித்தார்.

அப்போது மகளோடு, மனைவி எங்கு சென்றார் என்ற எந்த விபரமும் தெரியவில்லை. இதனால் கவலைக்குள்ளான சஞ்சீவ் பர்மன் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான சஞ்சீவ் பர்மனின் மனைவி மற்றும் அவரது மகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.