பெண் பயணி மீது சிறுநீர் கழித்த டிக்கெட் பரிசோதகர்..! விமானத்தை தொடர்ந்து ரயிலிலும்.. அதிர்ச்சி சம்பவம்!

 

ஓடும் ரயிலில் பெண் பயணி மீது டிக்கெட் பரிசோதகர் வேண்டுமென்றே சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு கடந்த ஆண்டு நவம்பர் 26-ம் தேதி நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் வந்து கொண்டிருந்தது. இதில் மும்பையைச் சேர்ந்த சங்கர் மிஸ்ரா (34) என்பவரும் இருந்தார். ஆரம்பம் முதலாகவே மதுவை அதிகம் குடித்ததால் உச்சக்கட்ட போதையில் இருந்த அவர், சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்தார். சிறுநீர் கழித்த பிறகும், தனது மர்ம உறுப்பை காட்டியபடி அவர் நின்று கொண்டிருந்தார். பின்னர் சக பயணிகள் திட்டியதை அடுத்து, அவர் அங்கிருந்து நகன்றார். இதுதொடர்பான புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அமெரிக்க நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்த அவர் பணிநீக்கமும் செய்யப்பட்டார்.

இந்த சூழலில், அடுத்ததாக இதுபோன்ற கீழ்த்தரமான சம்பவம் கொல்கத்தாவில் ஓடும் ரயில் ஒன்றில் நடந்திருக்கிறது. பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரில் இருந்து மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா நோக்கி கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு எக்ஸ்பிரஸ் ரயில் சென்றுகொண்டிருந்தது. அந்த ரெயிலில் அம்ரித்சரை சேர்ந்த ராஜேஷ்குமார் தனது மனைவியுடன் பயணித்தார். 

இந்நிலையில், நள்ளிரவு ரயிலில் மதுபோதையில் வந்த பீகாரை சேர்ந்த டிக்கெட் பரிசோதகர் முன்னா குமார் ரயில் இருக்கையில் ஆழ்ந்த தூக்கத்தில் தூங்கிகொண்டிருந்த ராஜேஷ்குமாரின் மனைவி மீது திடீரென சிறுநீர் கழித்தார். டிக்கெட் பரிசோதகரின் இந்த இழிவான செயலால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் கூச்சலிட்டுள்ளார். 

இதையடுத்து, உறங்கிக்கொண்டிருந்த பயணிகள் அனைவரும் விழித்து மதுபோதையில் பெண் மீது சிறுநீர் கழித்த டிக்கெட் பரிசோதகர் முன்னா குமாரை அடித்து உதைத்தனர். பின்னர், உத்தரபிரதேசத்தின் சார்பஹ் ரயில் நிலையத்திற்கு ரயில் வந்த உடன் டிக்கெட் பரிசோதகர் முன்னா குமாரை ரயில்வே போலீசிடம் ஒப்படைத்தனர். 

விசாரணையில் சிறுநீர் கழித்த நபர் பீகாரைச் சேர்ந்த முன்னாகுமார் என்பதும் டிக்கெட் பரிசோதகர் என்பதும் தெரியவந்தது. இந்த விஷயம் ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கவனத்திற்கு சென்றது. இதையடுத்து அவர் சம்பந்தப்பட்ட கோட்ட ரயில்வே நிர்வாகத்திற்கு கடிதம் மூலம் டிக்கெட் பரிசோதகர் முன்னா குமாரை பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவர் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டார்.