திருப்பதி வனப்பகுதியில் 3வது சிறுத்தை சிக்கியது.. திருமலை செல்லும் பக்தர்களின் அச்சம் நீங்கியது

 

திருப்பதி மலை வனப்பகுதியில் வனத்துறையினர் வைத்த கூண்டில் 3வது சிறுத்தை சிக்கியது.

உலகத்திலேயே அதிக மக்கள் தினசரி வந்து சாமி தரிசனம் செய்யும் கோவில் என்றால் அது திருப்பதி ஏழுமலையான் கோவில்தான். திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்து வந்தால் வாழ்வில் திருப்பம் நிச்சயம் என்று சொல்வார்கள். தரிசனத்திற்கு வரும் பக்தர்களில் சிலர் அலிபிரி மற்றும் ஸ்ரீ வாரி மெட்டு மலைப்பாதையில் நடந்து சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.

பக்தர்கள் நடந்து செல்லும் அலிபிரி அடர்ந்த வனப்பகுதி என்பதால் அங்குள்ள வனவிலங்குகள் அடிக்கடி நடைபாதைக்கு வருகின்றன. சிறுத்தை, கரடி, காட்டுப்பன்றி போன்ற விலங்குகளின் நடமாட்டமும் இருக்கும். கடந்த சில வாரங்களுக்கு முன்பு கரடி ஒன்று அலிபிரி நடைபாதையை கடந்து சென்றது.

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ஆந்திராவின் நெல்லூர் மாவட்டம் பாத்திரெட்டி பாளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள் திருப்பதி வந்தனர். அன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு அலிபிரி மலைப்பாதை வழியாக திருமலைக்கு செல்லத்தொடங்கினர். இரவு 8 மணியளவில் லட்சுமி நரசிம்மர்கோயிலுக்கு அருகில் செல்லும்போது பெற்றோருக்கு சற்றுமுன் நடந்து சென்றுகொண்டிருந்த லக்ஷிதா (6) என்ற சிறுமி திடீரென மாயமானார்.

சிறுமியை பல இடங்களில் தேடிய அவர்கள் பிறகு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். விடிய விடிய சிறுமியை தேடிய நிலையில் சனிக்கிழமையன்று லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு அருகில் சிறுமியின் உடல் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது. சிறுத்தை தாக்கி சிறுமி பலியான விவகாரம் பக்தர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அலிபிரி முதல் காலிகோபுரம் வரை உள்ள பகுதியில் மூன்று இடங்களிலும், காலிகோபுரத்தில் இருந்து ஏழாவது மைல் வரை உள்ள பகுதியில் ஒரு இடத்திலும் ,திருப்பதியில் இருந்து திருமலைக்கு வாகனங்களில் செல்ல பயன்படுத்தும் சாலையில் 38 வது வளைவு அருகே ஒரு இடத்திலும் சிறுத்தை நடமாட்டத்தை தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். இதனையடுத்து சிறுத்தையை பிடிப்பதற்காக திருப்பதி மலைப்பாதை அருகே வனத்துறையினர் மூன்று கூண்டுகளை அமைத்திருந்தனர்.

இதனிடையே மலைப்பாதையில் நடந்து செல்லும் பக்தர்களின் பாதுகாப்புக்காக கைத்தடி கொடுக்கும் திட்டத்தை தேவஸ்தான நிர்வாகம் தொடங்கியுள்ளது. இதுவரை 3 சிறுத்தைகள் சிக்கியிருந்தாலும் கரடி உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் உள்ளதால் பக்தர்கள் கூட்டமாக இணைந்தே நடந்து செல்ல வேண்டும் என்று வனத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.