வரும் 8-ம் தேதி பதவியேற்பு விழா.. மூன்றாவது முறையாக பிரதமராகிறார் மோடி!

 

3வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ள மோடியின் பதவியேற்பு விழா 8-ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றியது. இதில் பாஜக 240 தொகுதிகளை கைப்பற்றியது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பீகார் முதல்வர் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம், சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம், முன்னாள் பிரதமர் தேவகவுடா தலைமையிலான மதசார்பற்ற ஜனதாதளம், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், சிரங் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி போன்ற கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

மத்தியில் ஆட்சியமைக்க 272 தொகுதிகளை கைப்பற்றவேண்டிய நிலையில் பாஜக கூட்டணி 292 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதில் கூட்டணியில் இடம்பெற்றிருந்த தெலுங்கு தேசம் 16 தொகுதிகளையும், ஐக்கிய ஜனதாதளம் 12 தொகுதிகளையும் கைப்பற்றின. 

இந்நிலையில், மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழா வரும் 8-ம் தேதி மாலை நடைபெற உள்ளது. முன்னதாக, பாஜக தலைமையில் இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியினர் இன்று மாலை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமைகோர உள்ளனர். அதன்பின், வரும் 8-ம் தேதி மாலை பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்பு விழா நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.