வேகமெடுக்கும் கொரோனா பரவல்.. பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்!

 

கர்நாடகாவை தொடர்ந்து சண்டிகர் மாநிலத்திலும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்று புதிதாக 752 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதே நேரத்தில் கொரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3,420 ஆக உயர்ந்துள்ளதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, மற்ற மாநிலங்களை காட்டிலும் கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு, ஜேஎன்1 புதிய வகை கொரோனா பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. ஜேஎன்1 புதிய வகை கொரோனாவால் இந்தியாவில் இதுவரை 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

கேரளாவில் கொரேனா பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து, கர்நாடகாவில் கட்டுப்பாடுகள் அமல் படுத்தப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல, நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இருமல், சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, தற்போது சண்டிகரிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் மக்கள் கட்டாயமாக முகக் கவசம் அணிய வேண்டும்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேஎன்1 புதிய வகை கொரோனா கண்டறியப்பட்ட பிறகு, நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், அனைத்து மாநிலங்களும் விழிப்புடன் இருக்க  வேண்டும் என்று மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக, அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய சுகாதார செயலாளர் கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.