ஓடும் பைக்கில் காதல் ஜோடி செய்த அட்டகாசம்.. ரூ.11 ஆயிரம் அபராதம் விதித்த டெல்லி போலீசார்!
டெல்லியில் இளம்பெண் ஒருவர் பெட்ரோல் டேங்க் மீது அமர்ந்து வாலிபரை கட்டிப்பிடித்தவாறு பைக்கில் சென்ற வீடியோ வைரலான நிலையில், டெல்லி போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.
சமீப காலமாக சாலைகளில் இருசக்கர வாகனங்களில் செல்லும் இளைஞர்கள் ரீல்ஸ் போன்ற வீடியோக்களை மேக் செய்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதற்காக சாகசம் செய்வது, பிராங்க் செய்வதற்காக வாகனங்களை கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தல் செய்வது போன்ற வீடியோக்களை எடுத்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றன. அதே வேலையில் இளம் ஜோடிகள் பைக்குகளில் வேகமாக செல்லும் போது அனைவரும் பார்க்கும் வகையில் தங்கள் ரொமான்ஸ் செய்வது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
அந்த வகையில், சில தினங்களுக்கு முன்பு தலைநகர் டெல்லியில் இளம் ஜோடி ஒன்று பைக்கில் செல்லும் போது ரொமான்ஸ் செய்து கொண்டே சென்ற சம்பவம் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
காதல் ஜோடியின் அத்துமீறிய அந்த செயலை, அப்போது அருகில் பயணம் செய்த ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்ததாக தெரிகிறது. இதனை @Buntea என்ற பயனர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரின் அந்த பதிவில் “டெல்லியின் முட்டாள்கள் என எழுதி பதிவிட்டுள்ளதோடு, வீடியோ எடுக்கப்பட்ட நேரம் மாலை 7.15 மணி என்றும், நாள் - ஞாயிறு 16-ஜூலை என்றும், இடம் மங்கோல்புரி அருகே அவுட்டர் ரிங் ரோடு மேம்பாலம் என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் சாலை பாதுகாப்பு விதிமுறைகளையும் கடைபிடிக்காமல், ஹெல்மெட்டும் அணியாமல் அஜாக்கிரதையாக சென்றுள்ளனர். உடனடியாக அவர்கள் இருவர் மீதும் டெல்லி போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். விதிமீறலுடன் செயல்பட்ட அந்த ஜோடிக்கு நிச்சயம் சிறை தண்டனை அளிக்க வேண்டும் என்று சிலர் வலியுறுத்தினர். வீடியோவை பார்த்த மேலும் சிலர், காதல் ஜோடியை விமர்சித்து கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். ‘ரொமான்ஸ்’ செய்வதற்கு வேறு இடமே கிடைக்கவில்லையா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.
ட்விட்டர் பக்கத்தில் வெளியான இந்த வீடியோவிற்கு பதிலளித்த டெல்லி போக்குவரத்து போலீசார், இதுபோன்ற போக்குவரத்து விதிமீறல்களை மீறுவோர் பற்றி தங்களது செயலியில் புகாரளிக்குமாறு கேட்டுக் கெட்டுக்கொண்டுள்ளனர்.
அதனை தொடர்ந்து, மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை கொண்டு வாலிபரை அடையாளம் கண்ட போலீசார் ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், பிறருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அந்த வாலிபருக்கு போலீசார் ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்தனர்.