முடங்கியது ரயில்வே இணையதளம்.. டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் கடும் அவதி!

 

ஐஆர்சிடிசி இணையதளம் பராமரிப்பு காரணமாக முடங்கியதால் ரயிலில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

இந்தியாவில் ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை அனைத்து தரப்பினரும் ரயில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். டிக்கெட் முன்பதிவு செய்தால் செல்ல வேண்டிய இடத்துக்கு படுக்கை வசதியுடன் கூடிய பெட்டியில் பயணிக்க முடியும் என்பதால் இன்னும் கூட ரயில் பயணத்தின் மீதான மவுசு குறையவில்லை. இவ்வாறு பயணம் செய்யும் ரயில் பயணிகளுக்கு இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) இணையதளம் இயங்கி வருகிறது. இதில் உணவு, சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் கிடைக்கின்றன.

இந்நிலையில் ஐஆர்சிடிசி இணையதளத்தில் இ-டிக்கெட் முன்பதிவு சேவை திடீரென முடங்கியதால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். கடந்த அரை மணி நேரமாக சேவைகள் முடங்கி உள்ளதால் டிக்கெட் முன்பதிவு செய்யமுடியாமல் பயணிகள் சிரமம் அடைந்துள்ளனர்.

பராமரிப்பு நடவடிக்கை காரணமாக இணையதளம் முடங்கியுள்ளதாகவும் டிக்கெட் முன்பதிவு செய்ய பின்னர் முயற்சிக்குமாறும் ஐஆர்சிடிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஆர்சிடிசி இணையதளத்தில் புக்கிங் செய்ய வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே ஐஆர்சிடிசி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தொழில்நுட்ப காரணங்களால் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் குழுவினர் இதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர், விரைவில் முன்பதிவு சரி செய்யப்படும் என்று கூறப்பட்டது.