திடீரென தீப்பிடித்த எரிந்த அரசு பேருந்து.. உறங்கிக் கொண்டிருந்த நடத்துனர் உயிரிழந்த சோகம்!!

 

கர்நாடகாவில் அதிகாலை வேளையில் நடைபெற்ற தீவிபத்தில் பேருந்தில் உறங்கிக் கொண்டிருந்த நடத்துனர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு மெட்ரோ போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணிபுரிந்து வந்தவர் முத்தையா சுவாமி (45). இவர் நேற்றிரவு வழக்கம் போல தனது வழித்தடத்தில் பணிபுரிந்துவிட்டு இரவு லிங்கதீரன்னஹள்ளி பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தியுள்ளனர். வீட்டுக்கு செல்லாமல் அங்கேயே தூங்க ஓட்டுநர் பிரகாஷ் மற்றும் நடத்துனர் முத்தையா சுவாமி ஆகிய இருவரும் தூங்க முடிவெடுத்துள்ளனர்.

இந்த நிலையில், பேருந்து ஓட்டுநர் பிரகாஷ் சிறிது நேரம் பேருந்தில் தூங்கிவிட்டு பின்னர் பேருந்து நிலையத்தில் உள்ள அறைக்கு சென்றுள்ளார். நடத்துனர் முத்தையாவோ பேருந்திலேயே தூங்கிக்கொண்டு இருந்துள்ளார். 

இந்நிலையில், அதிகாலை 4.30 மணி அளவில் ஓட்டுநர் பிரகாஷ் பேருந்து அருகே வந்து பார்த்த போது தான் பேருந்து தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த பிரகாஷ் போலீசாருக்கு தகவல் தரவே, சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படை விரைந்தது வந்தது.

அதற்குள்ளாக பேருந்துக்குள் தூங்கிக்கொண்டிருந்த முத்தையா 80 சதவீதம் தீக்கிரையாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் சாட்சியமான ஓட்டுநர் பிரகாஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேருந்து தீபிடித்ததற்கான காரணத்தை கண்டறிய தடயவியல் நிபுணர்கள் சோதனை மேற்கொண்டுள்ளனர். 2013-ல் இருந்து அரசு நடத்துனராக பணியாற்றி வந்த முத்தையாவுக்கு மனைவியும், 14 வயதில் மகளும் உள்ளனர். தீவிபத்து ஏற்பட்ட பேருந்து 2017-ல் இருந்து இயங்கி வருவதாகவும், இதுவரை சுமார் 3.75 லட்சம் கிமீ பயணித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.