சிங்கத்தை கல்லால் அடித்து விரட்டிய விவசாயி..! வைரல் வீடியோ.. குவியும் பாரட்டு!

 

குஜராத்தில் விவசாயி ஒருவர் சிங்கத்தை கல்லால் விரட்டி துரத்தியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

குஜராத் மாநிலம் ஜுனாகத் கேஷோத் நகரின் கவுன்சிலர் விவேக் கொட்டாடியா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். கிர் சோம்நாத் மாவட்டத்தில் சிங்கம் பசுவின் மீது பாய்ந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக அவர் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

வீடியோவின் தொடக்கத்தில், சிங்கத்தின் பிடியில் மாடு சிக்கியிருப்பது தெரிகிறது. மூர்க்கமான சிங்கத்தின் வலுவான தாடை பசுவின் கழுத்தைப் பற்றிக்கொண்டது. சிங்கத்தின் பிடியில் இருந்து வெளியேற பசு தன்னால் இயன்றவரை முயற்சி செய்த நிலையிலும் அதன் முயற்சிகள் தோல்வியடைந்தன. அச்சமயம் மாட்டை வளர்த்த விவசாயி இதை கவனித்து தனது மாட்டை காப்பற்ற தீரமான செயலில் இறங்கினார்.

சில அடி தூரத்தில் நின்ற அந்த விவசாயி கூச்சலிட்டு சிங்கத்தை விரட்டுகிறார். இதை கவனித்த சிங்கம், மாட்டை புதருக்குள் இழுத்து செல்ல முயற்சிக்கிறது. ஆனால், மனம் தளராத விவசாயி அங்கிருந்த கல் ஒன்றை எடுத்து சிங்கத்தை நோக்கி ஓடி விரட்டி துரத்துகிறார். அச்சத்தில் சிங்கம் மாட்டை விட்டு சென்று பின்வாங்கி புதருக்குள் மறைந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.