குழந்தை இறந்துவிட்டதாகக் கூறிய மருத்துவர்கள்.. தகன மேடையில் உயிர் பிழைத்த அதிசயம்!

 

அசாமில் மருத்துவர்கள் இறந்துவிட்டதாகக் கூறிய குழந்தை மயானத்தில் தகனம் செய்யும் முன்பு கதறி அழுதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அசாம் மாநிலம் சில்சார் பகுதியைச் சேர்ந்த ரத்தன் தாஸ். இவர், செவ்வாயன்று மாலை தனது கர்ப்பிணி மனைவியை அங்குள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். கர்ப்பிணியை பரிசோதித்த மருத்துவர்கள் கர்ப்பகால சிக்கல் அதிகரித்து இருப்பதாகவும், தாயையோ அல்லது குழந்தையையோ ஒருவரை மட்டுமே காப்பாற்ற முடியும் என்றும் ரத்தன் தாஸிடம் தெரிவித்தனர்.

உயிருக்கு உயிரான மனைவியை என்னால் இழக்க முடியாது என்று கண்ணீரோடு ரத்தன் தாஸ் கூறவே, அன்று இரவே அவரது மனைவிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது பிறந்த ஆண் குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். பின்பு இறந்த குழந்தையின் உடலை அட்டைப் பெட்டியில் வைத்து ரத்தன் தாஸிடம் மருத்துவமனை ஊழியர்கள் அடுத்த நாள் காலையில் கொடுத்தனர்.

இதையடுத்து குழந்தையை தகனம் செய்வதற்காக சில்சாரில் உள்ள மயானத்திற்கு எடுத்துச் சென்று தகனம் செய்வதற்கு முன்பு பாக்கெட்டை திறந்த போது குழந்தை அழ ஆரம்பித்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனே மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அங்குக் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. 

மேலும், பிறந்த குழந்தை உயிருடன் இருக்கிறதா என்று கூட சரியாகப் பரிசோதிக்காமல் மருத்துவமனை ஊழியர்கள் இறந்துவிட்டதாகக் கூறுகின்றனர் என்று புகார் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பிரசவத்தில் அலட்சியமாக இருந்ததாக மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மருத்துவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இது குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனை மருத்துவர்கள், “நாங்கள் பல முறை குழந்தையைப் பரிசோதித்தோம்; அப்படியும் குழந்தையிடம் இருந்து எந்த அசைவும் இல்லை. தேவையான அனைத்து செயல்முறைகளையும் பின்பற்றிய பிறகே குழந்தை இறந்துவிட்டதாக அறிவித்தோம். எங்கள் மீது எந்த தவறுமில்லை” என்றனர்.