தேதி குறிச்சாச்சு.. அயோத்தி ராமர் கோவிலை ஜனவரி 22-ம் தேதி திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

 

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலை பிரதமர் மோடி ஜனவரி 22-ம் தேதி திறந்து வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்ட கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 3 மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம், 360 தூண்கள், 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில் ராமர் கோயில் கட்டப்படுகிறது. ராமர் கோவிலை கட்ட சுமார் ரூ.1,100 கோடி செலவாகும் என்று கோவில் கட்டுமானத்தை மேற்கொள்ளும் ராமஜென்ம பூமி தீர்த்தஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலை பிரதமர் மோடி ஜனவரி 22-ம் தேதி திறந்து வைக்க உள்ளதாக  தகவல் வெளியாகி இருக்கிறது. ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் மூத்த அர்ச்சகர்கள் வெளியிட்ட தகவலின்படி, ஜனவரி மூன்றாம் வாரத்தில் ராமர் கோயில் திறக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுவாமி கோவிந்த் கிரி கூறுகையில், “ஜனவரி 21 முதல் 23க்கு இடையில் மங்களகரமான முகூர்த்தம் தீர்மானிக்கப்படும். இது குறித்து பிரதமர் மோடிக்கு தெரியப்படுத்தப்படும்" என்றார். ராமர் கோவிலின் திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகள் (பூஜை) ஜனவரி 14-ம் தேதி தொடங்கும். பிரதமர் மோடி உறுதி செய்த பிறகு, கோவில் எப்போது திறக்கப்படும் என்பது இறுதி செய்யப்படும் என ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிரம்மாண்ட திறப்பு விழாவில் அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்வார்கள். திறப்பு விழாவுக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் ராமர் பக்தர்கள் பல வகைகளில் பங்களிப்பை வழங்கி வருகின்றனர். 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு ஜனவரி மாதமே திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.