கிணற்றில் விழுந்த பூனை.. காப்பாற்ற முயன்ற 5 பேர் விஷவாயு தாக்கி பலி!

 

மகாராஷ்டிராவில் கிணற்றுக்குள் விழுந்த பூனையை மீட்கும் முயற்சியில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் அகமத்நகர் மாவட்டம் நெவாசா தாலுகாவில் உள்ள வக்கடி கிராமத்தில் பாழடைந்த கிணறு ஒன்று உள்ளது. அது விலங்குகளின் கழிவுகளை சேமித்து பயோகேஸ் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட கிணறு என்று கூறப்படுகிறது. இப்படிப்பட்ட இந்த கிணற்றில் பூனை ஒன்று தவறி விழுந்துள்ளது. அந்த பூனையை காப்பாற்ற இளைஞர் ஒருவர் கிணற்றுக்குள் இறங்கியுள்ளார்.

அப்போது அவரின் கால் கிணற்றில் இருந்த சேற்றில் சிக்கிக்கொண்டது. பின்னர் அவரை மீட்பதற்க்காக மேலும் 5 பேர் ஒன்றன் பின் ஒன்றாக கிணற்றில் இறங்கி சிக்கிக்கொண்டனர். பின்னர் கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் போலீசார் மீட்புப் படையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

உறிஞ்சும் பம்புகள் கொண்டு மீட்பு படையினர் அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் 5 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். உயிருடன் மீட்கப்பட்ட விஜய் மாணிக் (35) அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது உடல் நலம் சீராகி இருப்பதாக போலீசார் தகவல் அளித்துள்ளார்.