அதிவேகமாக வந்த கார்.. 4 பல்டி அடித்து விபத்து.. துடிதுடித்து வாலிபர் பலி!

 

கர்நாடகாவில் தாறுமாறாக ஓடிய கார் பல்டி அடித்து மேம்பாலத் தடுப்புச் சுவரில் அந்தரத்தில் தொங்கிய கோர விபத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், ஹசன் மாவட்டம் சென்னராயப்பட்டணா அடுத்துள்ள ஷெட்டிஹள்ளி கிராமத்தில் கார் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. கார் சாலையில் உள்ள மேம்பாலத்தில் ஏறிய போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.

இதையடுத்து தறிகெட்டு ஓடிய கார் நான்கு முறை பல்டி அடித்து மேம்பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்து அந்தரத்தில் தொங்கியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த இளைஞர் ஒருவர் பலியானார். மேலும் பெண் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த கோர விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த படுகாயம் அடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மூன்று பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

உயிரிழந்த இளைஞரின் உடல் சென்னராயப்பட்டணா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நடத்திய விசாரணையில், விபத்தில் பலியானவர் தீரஜ் (18) என்பதும், காயமடைந்தவர்கள் ஜெகதீஷ், நளினாக்ஷி, துஷ்யந்த் என்பதும் தெரியவந்தது.

பெங்களூருவைச் சேர்ந்த இவர்கள் ஹசனுக்கு காரில் சென்ற போது இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. மேலும் அதிவேகமாக காரை ஓட்டி வந்ததே விபத்துக்கு காரணம் என்று கூறியுள்ள போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.