4 நாட்களுக்கு முன் மாயமான 9 வயது சிறுமி சடலமாக மீட்பு.. புதுச்சேரியில் பரபரப்பு

 

புதுச்சேரியில் காணாமல் போன 9 வயது சிறுமி 3 நாட்கள் கழித்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிம் சோலை நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன். இவர் டாடா ஏஸ் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மைதிலி. இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. இரண்டாவது மகள் ஆர்த்தி (9). இவர், அங்குள்ள அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2-ம் தேதி மதியம் 1 மணியளவில் வீட்டின் அருகில் விளையாடிய போது திடீரென  மாயமானார். இது குறித்து பெற்றோர் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சோலை நகர் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் சிறுமி நடந்து சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, சிறுமி நடந்து சென்ற பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

இந்த நிலையில், சிறுமியைக் கண்டுபிடித்துத் தரக்கோரி சிறுமியின் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் காணாமல் போன சிறுமியின் உடலை கை கால்களை கட்டி சாக்கு மூட்டையில் கட்டி அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள வாய்காலில் போட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இந்த சம்பவத்தை கொலை வழக்காகப் பதிவுச் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் புதுச்சேரி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.