மணிப்பூரில் பயங்கர கலவரம்... 5 நாள்களுக்கு144 தடை உத்தரவு.. இணைய சேவை முடக்கம்!!

 

மணிப்பூரில் பழங்குடியின பட்டியலில் மெய்டேய் சமூகத்தினரைச் சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டம் கலவரமாக வெடித்ததால், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தின் நிலப்பரப்பின் பெரும்பகுதியைக் கொண்ட மலை மாவட்டங்களில், பழங்குடியின மக்களான நாகாக்கள் மற்றும் குக்கிகள் வாழ்ந்து வருகின்றனர். அதே போன்று, மாநிலத்தின் மக்கள் தொகையில் 53 விழுக்காடு மெய்டேய் சமூகத்தினரும் உள்ளனர்.

இந்த நிலையில், பழங்குடியின பட்டியலில் மெய்டேய் சமூகத்தினர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கு, பழங்குடியினர் மலைவாழ் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தங்களது கண்டனத்தைப் பதிவு செய்யும் வகையில், உக்ருல், கங்க்பொக்பி, சந்தேல் உள்ளிட்ட மாவட்டங்களில் பேரணி நடத்தினர்.

இதை தொடர்ந்து மணிப்பூரின் எட்டு மாவட்டங்களில் புதன்கிழமை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மற்றும் முழு வடகிழக்கு மாநிலத்திலும் மொபைல் சேவைகள் சேவைகள் நிறுத்தப்பட்டன. நிலைமை பதற்றமாகவே உள்ளது.

பழங்குடியினர் ஆதிக்கம் இல்லாத இம்பால் மேற்கு, கக்சிங், தவுபால், ஜிரிபாம் மற்றும் பிஷ்ணுபூர் மாவட்டங்களிலும், பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் சுராசந்த்பூர், காங்போக்பி மற்றும் தெங்னௌபால் மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், போராட்டக்காரர்களால், மாநிலத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால், அம்மாநில ஆளுநர் அதிரடி உத்தரவை எடுத்துள்ளார். கலவரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளதால், கலவரத்தை கட்டுப்படுத்த போராட்டக்காரர்களை கண்டதும் சுட அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டு உள்ளார். மேலும், 5 நாட்களுக்கு இணைய சேவையை முடக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.