ரேபிஸ் நோயால் இளம்பெண் மரணம்.. ரேபிஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்ட போதும் நிகழ்ந்த சோகம்!

 

மகாராஷ்டிராவில் நாய்க்கடியினால் பாதிக்கப்பட்ட பெண் அதற்கு ரேபிஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட பின்பும் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் கேஎம்சி சௌக் மற்றும் பௌசிங்ஜி சாலையில் பிப்ரவரி 3-ம் தேதி அன்று கிட்டத்தட்ட 20 பேரை அங்கு இருந்த தெருநாய் கடித்துள்ளது. அதில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர்தான் 21 வயதான ஸ்ருஷ்டி ஷிண்டே. இவர், தனது தாய், தந்தை, மற்றும் சகோதரியுடன் கோலாப்பூரில் வசித்து வருகிறார். இவரது தந்தை மின் ஒப்பந்ததாரராக பணி புரிந்து வருகிறார். இவர் ஒரு கிராஃபிக் டிசைனர், வணிகத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர்.

சம்பவதினமான பிப்ரவரி 3-ம் தேதி அன்று இவர் வெளியில் சென்று கொண்டிருந்தபோது, அருகே வந்த நாய் ஒன்று இவரின் காலை கடித்துள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட ஷிண்டேவை உள்ளூர் வாசிகள் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரின் காயங்களுக்கு தையல் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு, நாய் கடித்தால் செலுத்தப்படும் ரேபிஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில், “ரேபிஸ் தடுப்பூசிக்கு செலுத்தப்படும் ஐந்து டோஸ்களையும், நோய் எதிர்ப்பு சக்திக்காக ஆண்டி-ரேபிஸ் சீரம் என்ற மருந்தினை ஷிண்டே சரியாக எடுத்து வந்தார்.” என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று காய்ச்சல் மற்றும் உடல் நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இதனைதொடர்ந்து பரிசோதனை செய்யப்பட்டு வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், திங்கள் கிழமை இரவு 8 மணி அளவில் கூடுதல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிகாலை 2 மணி அளவில் இப்பெண் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியதோடு, ஊசி செலுத்தி கொண்ட பின்பும் இவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.